இப்போது சிலர் "பம்பரக் கண்ணாலே பச்சைக் குத்தும்போது" தான் பத்தாண்டுகளுக்கு முன் என்னுடைய பம்பர அனுபவம் நினைவுக்கு வருகிறது ( பத்தாண்டுக்கு முன்னாடியேவா? என்று சின்னக்கவுண்டரை மனதில் வைத்துக்கொண்டு கேட்காதீர்கள் )...
அப்போது நாங்கள் குடியிருந்த தெருவின் முனை ஒரு விளையாட்டுக்களம் போல இருக்கும். அங்குதான் எங்கள் கில்லி-தாண்டில், பம்பர, ஜல்லி விளையாட்டுப் போட்டிகள் (தெரு விளக்கின்) மின்னொளியில் நடைபெறும். சீசனுக்கு ஏற்றாற்போல் விளையாட்டும் மாறுபடும்.
பம்பர சீசன் வந்துவிட்டால் பக்கத்து மள்ளிய ( மளிகை?) கடையில் புதுசுக் கண்ணாப் புதுசு என்று பல வகை, வண்ணங்களில் பம்பரங்கள் விற்பனைக்கு வந்துவிடும். வகை என்றால் சட்டிக்கட்டை, ஒல்லிக்கட்டை, மூளிக்கட்டை என்று பல வகைகளில் கிடைக்கும். பச்சையை சுற்றி மஞ்சள், சிவப்பை சுற்றி பச்சை, இன்னும் பல என்று வண்ணங்களுக்கும் குறைவிருக்காது.
நான் பம்பரம் விடும் முறையால் எனக்கு சட்டிக்கட்டை ஒத்துவராது. சட்டிக்கட்டை சுற்றும் போது கொஞ்சம் சாய்ந்தாலும் கட்டைத் தரையில் மோதி உருண்டு ஓடி விடும். என்னுடையத் தேர்வு எப்போதும் ஒல்லியாகவும் இல்லாத சட்டியாகவும் இல்லாத முட்டை வடிவக்கட்டைதான்.
வண்ணம் தேர்ந்தெடுக்கும் போதும் கவனம் தேவை! கடையில் பார்க்கும் போது அழகாய்த் தோன்றும் வண்ணம் சுற்றும் போது காணச் சகிக்காது. அதனால் எப்போதும் மற்றவரின் பம்பரங்கள் சுற்றும்போது பார்த்து நல்ல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கடைசியாகவே பம்பரம் வாங்குவேன்.
அடுத்த வேலை பம்பரத்துக்கு ஆணி அடிப்பது! முதலில் எல்லோரும் இரும்பு கடையில் ஆணி வாங்கி அதன் தலையை வெட்டி விட்டு பம்பரத்துக்கு அடிப்போம். ஆனால் பிறகு பம்பரக்காரன் ஒருவனின் தேடலில் ஒரு மாற்றுப்பொருள் கிடைத்தது! பீரோக் கம்பெனியில் பற்ற வைப்பதற்குப் பயன் படுத்தும் elctric rod களின் மிச்சம் தான் அது! திருடுவது குற்றம் என்று அந்த வயதிலேயேத் தெரிந்ததால் திருட மாட்டோம். யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து விடுவோம்(!).
பம்பரத்துக்கு ஆணி அடிப்பது ஒருக் கலை. வேகமாக அடித்தால் கட்டை இரண்டாகப் பிளக்கும்.
கோணையாக அடித்துவிட்டாலோ மழைப்பாட்டில் ஷ்ரேயா ஆடுவது போல ஒரு 45 டிகிரி கோணத்தில் பம்பரம் சுற்ற ஆரம்பித்து விடும். சரியாக ஆணியை அடித்து விட்டாலும் பம்பரம் முழுமையாகத் தயாரில்லை!
கணினியே வாங்கினாலும் அதற்குப் பொட்டுவைத்து அழகு பார்ப்பது தமிழனின் பழக்கம். பம்பரத்திற்கும் ஒரு பொட்டு இருக்கிறது. அதன் பெயர் - "கொண்டாணி" (கொண்டை ஆணி). அதையும் வாங்கி பம்பரத்தின் உச்சந்தலையில் அடித்து விட்டால் பம்பர வேலை முடிந்தது.
பம்பரம் மட்டும் இருந்தால் போதுமா? (சுகன்யாவும் வேண்டும் என்கிறீர்களா?) சாட்டைக்கும் வேலை இருக்கிறது. சாட்டையை அப்படியேப் பயன்படுத்தினால் வாட்டமாக இருக்காது. ஒரு குளிர் பான பாட்டிலின் மூடியை எடுத்து சப்பையாக்கித் துளையிட்டு அதில் சாட்டையின் ஒரு முனையை சொருகி முடிந்துவிட்டால், சாட்டையைப் பம்பரத்தில் சுற்றிக்கொண்டு பிடித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
சின்னப் பசங்களிடம் பிலிம் காட்டுவதற்காகவே பம்பரத்தை தரையில் விடாமலேயே கையில் சுற்ற வைக்க பல நாள் இரவு கண்விழித்துக் கற்றுக் கொண்டேன்!
ஆனால் சின்னக் கவுண்டருக்குப் பிறகு பம்பரம் விடுவதை நிறுத்தி விட்டோம்.
உங்கள் பம்பர அனுபவம் எப்படி?
(நான் இதுவரை பம்பரம் விடும் பெண்களைப் பார்த்ததில்லை)
சந்திப்போம்!
Saturday, February 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment