அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 1
இந்தக் கதை (சத்தியமாக் கதை தாங்க!) கிட்டத் தட்ட ஓராண்டுக்கு முன் என் நண்பர்கள் வட்டத்துக்கு மட்டும் மடலில் அனுப்பியது. கொஞ்சம் மாற்றங்களுடன் இப்போது இங்கே! காதல் பயணம் போல இழுத்து விட மாட்டேன் :) மூன்றே பதிவில் முடித்து விடுகிறேன்!!!“I am Ilavarasi, Father is a businessman and Mom is a doctor. I m from Coimbatore only, had my schooling in GRD”
கல்லூரியின் முதல் நாளில் அவள் தன்னை அப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
அப்பா பெரிய பிஸினஸ்மேன் என்கிற பகட்டோ, மேல்தட்டுக்குரிய படோபடமோ இல்லாமல் அவள் எளிமையாய் இருந்தது, அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்று அவள் சொன்னதை வைத்து மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு,
அவன் முறை வந்த போது சொன்னான் :
“ I am Arul, Father is a clerk and Mother is House wife. I m from karur, had my schooling in MHSS”
“MHSS?”
“Municipality Hr. Sec. School, sir”
கேட்டதும் வகுப்பில் பெரிய சிரிப்பொலி. அவன் அதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுவே அவனுடைய தாழ்வு மனப்பான்மைக்கும் பிள்ளையார் சுழி போட்டது.
அவன் யாரிடமும் அதிகம் பேசாமல் தனக்கென ஒரு சிறு நட்பு வட்டத்துக்குள்ளேயே முதல் வருடம் முழுவதும் கழித்தான்.
பள்ளியில் ஒரு முரட்டுக் குணத்தோடுத் திரிந்தவன் இப்படி மாறிப்போனதற்கு, அவனுக்குப் புதிதாய் இருந்த மாநகர வாழ்க்கையும் ஒரு காரணமாய் அமைந்தது.
அடுத்த ஆண்டு ஜூனியர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் முதன் முதலாய்ப் பேசினான்.
தன்னுடைய வகுப்பில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதில் அவனுக்கு எந்தக் கூச்சமும் இல்லை.
அன்று அவன் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் ஜூனியர்களுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.
அதற்குப்பிறகுதான் அவனுடைய வகுப்பிலும் கூட சிலர் அவனோடுபேசிப் பழக ஆரம்பித்தார்கள்.
“அருள், நீ இப்படியெல்லாம் கூடப் பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினு இல்ல நான் நெனச்சேன்” இளவரசி வந்து அவனிடம் இப்படிப் பேசியபோது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“உங்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமா?”
“என்னோடப் பேரப் பார்த்தாத் தெரியலையாத் தமிழ் பொண்ணுதான்னு? ஆமா நீ படிச்ச school, boys school-aa?”
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்”
“என்ன வாங்கப் போங்கன்னே சொல்றியே, அதனாலக் கேட்டேன்”
“இல்ல..எனக்கு அப்படியேப் பழகிடுச்சு”
இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களுடைய நட்பு.
அதற்குப் பிறகு ஒன்றாக கேண்டீன் போவது, library போவது என்று அவர்கள் பேசிக்கொள்ளும் நேரம் அதிகமானது.
அவனுடையத் தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அவளோடு சகஜமாகப் பேசுவதும் சாத்தியமானது.
மெதுவாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.இருவருக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும், முரண்படும் விஷயங்களும் இருந்தன. ஆனால் இருவருமே அடுத்தவர் கருத்தை குறை சொல்லி எப்போதும் பேசியதில்லை.
அவள் பள்ளியிலேயே ஆண்களோடு சேர்ந்து படித்தவளென்பதால் அவளுக்கு இவனோடுப் பழகுவதில் எந்த வித்தியாசமுமில்லை.
ஆனாள் அவன் ஒரு பெண்ணோடு நட்பாகப் பழகுவது இதுதான் முதல் முறை. அதனால் அவள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளுக்கும் புது அர்த்தம் தேடிக் கொண்டிருந்தான். அவளும் கூட மற்றவர்களை விட இவனிடம் மட்டும் அதிக நெருக்கமாய்ப் பழகியது அவனுக்கும் ஒரு சலனத்தை உண்டு பண்ணியது.
அடுத்த வருடம் தன்னுடையப் பிறந்த நாளன்றைக்கு, “இந்த வருஷம் நீ நெனச்சதெல்லாம் நடக்கும்” என்று வாழ்த்தியவளிடம், “நான் உன்னக் காதலிக்கிறேன்”, என்று சடாரென சொல்லி விட்டான். எதுவும் பேசாமல் திரும்பிப் போனவள் மறுநாள் வந்து சொன்னாள், “நேத்து நீ அப்படி சொன்னவுடனே உன்னக் கன்னத்துல பளார்னு அறையனும்னு தான் தோணுச்சு. பிறந்த நாளாச்சேனு தான் கம்முனு போயிட்டேன். ஒரு பொண்ணுக் கொஞ்சம் சிரிச்சுப் பேசிப் பழகினா உடனே லவ்வா? உன்னையெல்லாம் LKG யிலே இருந்தே co-ed ல படிக்க வச்சிருக்கனும். இனிமே அந்த மாதிரி எண்ணத்தோட எங்கிட்டப் பேசாத!”
அவன் அதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருந்தான். அதன்பிறகு அவன் அவளோடுப் பேசுவதையே நிறுத்தியிருந்தான். ஒரு செமஸ்டர் முழுவதும் இருவரும் பேசிக் கொள்ளாமலேக் கழிந்தது. அவள் அந்த செமஸ்டரில் இரண்டு பாடங்களில் அரியர்ஸ் வாங்கியிருந்ததை விட, அந்த செமஸ்டரில் அவன் முதல் மார்க் வாங்கியிருந்ததைத்தான் அவளால் நம்பவே முடியவில்லை. அவர்களுடைய பிரிவு அவனை விட அவளை ரொம்பவே பாதித்திருந்தது.
அடுத்த செமஸ்டர் ஆரம்பித்த போது அவனிடம் பேசுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒருமுறை அவன் லேபில் தனியாக இருக்கும் போது போய்ப் பேசினாள்.
“அருள்! உங்கிட்டக் கொஞ்சம் பேசனும்!”
அவள் கிட்டே வந்து பேசிய போதும், கேட்காதவனைப் போல் வெளியே நடந்து வந்தான்.
“அருள்!உன்ன நான் எங்கிட்டப் பேசவேக் கூடாதுன்னா சொன்னேன்? லவ்வரா இருந்தா மட்டும் தான் பேசுவியா? ஒரு ஃபிரெண்டா பேச மாட்டியா?”
“உங்கிட்ட நான் மறுபடியும் பேசினாலே எனக்கு உம்மேலக் காதல்தான் வரும்! அது உனக்கும் கஷ்டம்; எனக்கும் கஷ்டம். உங்கிட்ட நான் பேசாம இருக்கிறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது! சொல்லப் போனா நான் முன்னவிட இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நீயும் போய் ஒழுங்காப் படிக்கிற வழியப் பார், அரியர்ஸ் வேற விழுந்திருக்கு!” – சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் போய் விட்டான்.
அவன் சொன்னதும் உண்மைதான். அவன் முன்பை விட மிகவும் சந்தோஷமாகவே இருந்தான்.
ஆனால் அவளுக்குதான் அவனிடம் பேசாமல் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது.
அவளுக்குப் பள்ளியில் பெஸ்ட் ஃபிரெண்டாக இருந்த கோபியோடு ஒருமுறை சண்டையாகி பேசுவதை நிறுத்தியவள், இன்று வரை அவனோடு பேசாமல் தான் இருக்கிறாள். அவனோடுப் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதும் இல்லை. ஆனால் இப்போது வகுப்பில் தினமும் அருள் தன்னைத் தவிர மற்ற எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும்போது அவளுக்கு ஏனோ மனது கஷ்டமாய் இருந்தது.
ஒவ்வொருமுறை அவள், அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்யும்போதும், அவன் அலட்சியமாய் உதாசீனப்படுத்திவிட்டுப் போனது அவளை மேலும் காயப்படுத்தியது. அன்று, அவளுடையப் பிறந்தநாளுக்கு வகுப்பில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும்போது, அவனுக்கும் கொடுத்தாள்.
தயக்கத்தோடு ஒன்றை எடுத்துக் கொண்டவன், “இந்த வருஷம் நீ நெனச்சதாவது உனக்கு நடக்கட்டும்” என்று சொன்னதும், தாமதிக்காமல் அவள் சொன்னாள் : “அருள், நான் உன்னக் காதலிக்கிறேன்”.
( அடுத்தப் பகுதி )
1 comment:
Hello Sir/Madam,
Keyboard Breakers is a new Startup company for Tamil and English Typing Work. Here we are professional typist to complete all your typing works within a day to a week.Hope, that you will contact us for your work.
contact:- 9842546227
email:-keyboardbreakerz@gmail.com
Thanking you.
Post a Comment