Thursday, June 26, 2008

Saturday, February 17, 2007

5..4..3..2..1..0

5..4..3..2..1..0


‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!



நொடிகளெங்கும் உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி வருகிறதென் இதயமுள்.
என் வாழ்க்கைக் கடிகாரமும்
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!



உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!



பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!



நான், நீயிலி*!



“ “

( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )

அழியாத அன்புடன்,
Praba

*நீயிலி – நீ இல்லாதவன்.
(பெயரிலி – பெயர் இல்லாதவர் போல!)

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவ

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 1

இந்தக் கதை (சத்தியமாக் கதை தாங்க!) கிட்டத் தட்ட ஓராண்டுக்கு முன் என் நண்பர்கள் வட்டத்துக்கு மட்டும் மடலில் அனுப்பியது. கொஞ்சம் மாற்றங்களுடன் இப்போது இங்கே! காதல் பயணம் போல இழுத்து விட மாட்டேன் :) மூன்றே பதிவில் முடித்து விடுகிறேன்!!!

“I am Ilavarasi, Father is a businessman and Mom is a doctor. I m from Coimbatore only, had my schooling in GRD”
கல்லூரியின் முதல் நாளில் அவள் தன்னை அப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
அப்பா பெரிய பிஸினஸ்மேன் என்கிற பகட்டோ, மேல்தட்டுக்குரிய படோபடமோ இல்லாமல் அவள் எளிமையாய் இருந்தது, அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்று அவள் சொன்னதை வைத்து மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு,
அவன் முறை வந்த போது சொன்னான் :
“ I am Arul, Father is a clerk and Mother is House wife. I m from karur, had my schooling in MHSS”
“MHSS?”
“Municipality Hr. Sec. School, sir”
கேட்டதும் வகுப்பில் பெரிய சிரிப்பொலி. அவன் அதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுவே அவனுடைய தாழ்வு மனப்பான்மைக்கும் பிள்ளையார் சுழி போட்டது.
அவன் யாரிடமும் அதிகம் பேசாமல் தனக்கென ஒரு சிறு நட்பு வட்டத்துக்குள்ளேயே முதல் வருடம் முழுவதும் கழித்தான்.
பள்ளியில் ஒரு முரட்டுக் குணத்தோடுத் திரிந்தவன் இப்படி மாறிப்போனதற்கு, அவனுக்குப் புதிதாய் இருந்த மாநகர வாழ்க்கையும் ஒரு காரணமாய் அமைந்தது.

அடுத்த ஆண்டு ஜூனியர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் முதன் முதலாய்ப் பேசினான்.
தன்னுடைய வகுப்பில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதில் அவனுக்கு எந்தக் கூச்சமும் இல்லை.
அன்று அவன் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் ஜூனியர்களுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.
அதற்குப்பிறகுதான் அவனுடைய வகுப்பிலும் கூட சிலர் அவனோடுபேசிப் பழக ஆரம்பித்தார்கள்.

“அருள், நீ இப்படியெல்லாம் கூடப் பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினு இல்ல நான் நெனச்சேன்” இளவரசி வந்து அவனிடம் இப்படிப் பேசியபோது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“உங்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமா?”
“என்னோடப் பேரப் பார்த்தாத் தெரியலையாத் தமிழ் பொண்ணுதான்னு? ஆமா நீ படிச்ச school, boys school-aa?”
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்”
“என்ன வாங்கப் போங்கன்னே சொல்றியே, அதனாலக் கேட்டேன்”
“இல்ல..எனக்கு அப்படியேப் பழகிடுச்சு”
இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களுடைய நட்பு.

அதற்குப் பிறகு ஒன்றாக கேண்டீன் போவது, library போவது என்று அவர்கள் பேசிக்கொள்ளும் நேரம் அதிகமானது.
அவனுடையத் தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அவளோடு சகஜமாகப் பேசுவதும் சாத்தியமானது.
மெதுவாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.இருவருக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும், முரண்படும் விஷயங்களும் இருந்தன. ஆனால் இருவருமே அடுத்தவர் கருத்தை குறை சொல்லி எப்போதும் பேசியதில்லை.
அவள் பள்ளியிலேயே ஆண்களோடு சேர்ந்து படித்தவளென்பதால் அவளுக்கு இவனோடுப் பழகுவதில் எந்த வித்தியாசமுமில்லை.
ஆனாள் அவன் ஒரு பெண்ணோடு நட்பாகப் பழகுவது இதுதான் முதல் முறை. அதனால் அவள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளுக்கும் புது அர்த்தம் தேடிக் கொண்டிருந்தான். அவளும் கூட மற்றவர்களை விட இவனிடம் மட்டும் அதிக நெருக்கமாய்ப் பழகியது அவனுக்கும் ஒரு சலனத்தை உண்டு பண்ணியது.

அடுத்த வருடம் தன்னுடையப் பிறந்த நாளன்றைக்கு, “இந்த வருஷம் நீ நெனச்சதெல்லாம் நடக்கும்” என்று வாழ்த்தியவளிடம், “நான் உன்னக் காதலிக்கிறேன்”, என்று சடாரென சொல்லி விட்டான். எதுவும் பேசாமல் திரும்பிப் போனவள் மறுநாள் வந்து சொன்னாள், “நேத்து நீ அப்படி சொன்னவுடனே உன்னக் கன்னத்துல பளார்னு அறையனும்னு தான் தோணுச்சு. பிறந்த நாளாச்சேனு தான் கம்முனு போயிட்டேன். ஒரு பொண்ணுக் கொஞ்சம் சிரிச்சுப் பேசிப் பழகினா உடனே லவ்வா? உன்னையெல்லாம் LKG யிலே இருந்தே co-ed ல படிக்க வச்சிருக்கனும். இனிமே அந்த மாதிரி எண்ணத்தோட எங்கிட்டப் பேசாத!”
அவன் அதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருந்தான். அதன்பிறகு அவன் அவளோடுப் பேசுவதையே நிறுத்தியிருந்தான். ஒரு செமஸ்டர் முழுவதும் இருவரும் பேசிக் கொள்ளாமலேக் கழிந்தது. அவள் அந்த செமஸ்டரில் இரண்டு பாடங்களில் அரியர்ஸ் வாங்கியிருந்ததை விட, அந்த செமஸ்டரில் அவன் முதல் மார்க் வாங்கியிருந்ததைத்தான் அவளால் நம்பவே முடியவில்லை. அவர்களுடைய பிரிவு அவனை விட அவளை ரொம்பவே பாதித்திருந்தது.

அடுத்த செமஸ்டர் ஆரம்பித்த போது அவனிடம் பேசுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒருமுறை அவன் லேபில் தனியாக இருக்கும் போது போய்ப் பேசினாள்.
“அருள்! உங்கிட்டக் கொஞ்சம் பேசனும்!”
அவள் கிட்டே வந்து பேசிய போதும், கேட்காதவனைப் போல் வெளியே நடந்து வந்தான்.
“அருள்!உன்ன நான் எங்கிட்டப் பேசவேக் கூடாதுன்னா சொன்னேன்? லவ்வரா இருந்தா மட்டும் தான் பேசுவியா? ஒரு ஃபிரெண்டா பேச மாட்டியா?”
“உங்கிட்ட நான் மறுபடியும் பேசினாலே எனக்கு உம்மேலக் காதல்தான் வரும்! அது உனக்கும் கஷ்டம்; எனக்கும் கஷ்டம். உங்கிட்ட நான் பேசாம இருக்கிறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது! சொல்லப் போனா நான் முன்னவிட இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நீயும் போய் ஒழுங்காப் படிக்கிற வழியப் பார், அரியர்ஸ் வேற விழுந்திருக்கு!” – சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் போய் விட்டான்.
அவன் சொன்னதும் உண்மைதான். அவன் முன்பை விட மிகவும் சந்தோஷமாகவே இருந்தான்.
ஆனால் அவளுக்குதான் அவனிடம் பேசாமல் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது.

அவளுக்குப் பள்ளியில் பெஸ்ட் ஃபிரெண்டாக இருந்த கோபியோடு ஒருமுறை சண்டையாகி பேசுவதை நிறுத்தியவள், இன்று வரை அவனோடு பேசாமல் தான் இருக்கிறாள். அவனோடுப் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதும் இல்லை. ஆனால் இப்போது வகுப்பில் தினமும் அருள் தன்னைத் தவிர மற்ற எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும்போது அவளுக்கு ஏனோ மனது கஷ்டமாய் இருந்தது.
ஒவ்வொருமுறை அவள், அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்யும்போதும், அவன் அலட்சியமாய் உதாசீனப்படுத்திவிட்டுப் போனது அவளை மேலும் காயப்படுத்தியது. அன்று, அவளுடையப் பிறந்தநாளுக்கு வகுப்பில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும்போது, அவனுக்கும் கொடுத்தாள்.
தயக்கத்தோடு ஒன்றை எடுத்துக் கொண்டவன், “இந்த வருஷம் நீ நெனச்சதாவது உனக்கு நடக்கட்டும்” என்று சொன்னதும், தாமதிக்காமல் அவள் சொன்னாள் : “அருள், நான் உன்னக் காதலிக்கிறேன்”.

( அடுத்தப் பகுதி )

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவ

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 1

மறுபடியும் இருவரும் தனியாக சந்தித்துப் பேசிய போது சொன்னாள்,

“சத்தியமா உன்னோடப் பிறந்த நாளன்னைக்கு நீ சொன்னப்போ எனக்கு உம்மேல 1% கூடக் காதல் இல்ல, ஆனா அதுக்கப்புறம் நீ என்ன avoid பண்ணப்போ தான் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். உன்னப் பார்க்காமலே இருந்திருந்தாக் கூடப் பரவால்ல, ஆனா தினமும் உன்னப் பார்த்தும், பேசாம இருக்கிறது எனக்கு என்னமோ மாதிரி இருந்தது.நல்லா யோசிச்சுட்டுதான் முடிவு பண்ணியிருக்கேன், when we miss someone, we really love them! I missed u so much!”

அவனுக்கு ஒருபக்கம் சந்தோசமாய் இருந்தாலும் ஒருபக்கம் தயக்கமாகவும் இருந்தது. அவனுடையத் தகுதிக்கு அவள் அதிகமோ என்று யோசித்தாலும் அவளும் முழுமையாக தன்னைக் காதலிக்கிறாள் என்பதே அவனுக்கு பெரும் தைரியத்தைக் கொடுத்தது.

அதற்குப்பிறகு இரண்டு வருடமாய் அவர்கள் ஒன்றாய் சினிமாவுக்கு சென்றதில்லை; ஐஸ்க்ரீம் பார்லரில் மணிக்கணக்கில் பேசியதில்லை; பூங்காவில் உட்கார்ந்து அரட்டையடித்ததில்லை, ஆனால் காதலித்தார்கள். கடைசி வருடம் முடியும்போது அவனுக்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்திருந்தது. அவள் மேலேப் படிக்க பெங்களூரில் ஒரு கல்லூரியில் சேரப் போவதாக சொல்லியிருந்தாள். கடைசி நாள் இருவரும் பிரியும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் பேசினாள் : “அருள் நான் MBA முடிக்க இன்னும் ரெண்டு வருஷம் ஆகும், அப்புறம் ஒரு வருஷத்துக்குள்ள எங்க வீட்ல எனக்கு அலைன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க, அதுக்குள்ள நீ தான் வந்து எங்க அப்பாகிட்டப் பேசனும்!”

“நான் வந்து பேசறதுக்கு முன்னாடி நீயும் சொல்லி வை”

“இல்ல அருள், நான் பேசற சூழ்நிலைல எங்க வீடு இல்ல, நீ தான் பேசனும்!”

“சரி விடு, அதுக்கு இன்னும் நாள் இருக்கு, டைம் வரும்போது பார்த்துக்கலாம்”

மூன்று வருடத்துக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தான் அருள்.

“டேய் அருள், என்னடா இந்த நேரத்துல ஃபோன் பண்ணி பாருக்கு வரச் சொல்லியிருக்க! உனக்கு என்ன ஆச்சு???”

“மொதல்ல உட்காருடா, வினோத்” என்று சொல்லிவிட்டு, வெயிட்டரிடம் ஆர்டர் பண்ணினான்.

“ரெண்டு 5000 பியர், teachers ஒரு ஆஃப், கிங்ஸ் ஒரு பாக்கெட்”

“”டேய் என்னடா இதெல்லாம்? நீ செகண்ட் இயர்லயே தண்ணி அடிக்கிறத நிறுத்தினவன் தான? உனக்கு இப்ப என்ன ஆச்சு?”

கேட்ட வினோத்திடம் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினான்.

----------

அருள்,

மூனு மாசமா உங்கிட்டப் பேசாம இருக்கிறதுக்கு மொதல்ல என்ன மன்னிச்சுடு. என்னால அதத்தவிர வேற எதுவும் பண்ண முடியல.

எனக்கு எப்படி சொல்றதுனுத் தெரியல எங்க வீட்ல எனக்கு சீரியஸா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்குக் கல்யாணம் பண்றதுனு முடிவு பண்ணிட்டாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் என்னப் பத்தி பேசிக்கிறதப் பார்த்தா அவங்க கனவெல்லாம் வேற மாதிரி இருக்கு. இப்பப் போய் நான் நம்ம விஷயத்த சொன்னா ஏத்துப்பாங்கங்கற நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்ல!

நடக்காதத நம்பிட்டு இருக்கிறதவிட நடக்கப் போறதையே ஏத்துப்போம்னு அவங்கக் கனவையே நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்! எங்க வீட்டோட + என்னோட நிலமைய இன்னும் விரிவா சொல்லி உன்னக் காயப்படுத்த வேணாம்னுதான் இவ்வளவு சுருக்கமா எழுதியிருக்கேன்.

நான் சொல்றத நீ புரிஞ்சிப்பேன்னு நெனைக்கிறேன். என்ன மறந்திடுனு சொல்லல, ஆனா என்னையே நெனச்சிட்டு இருக்க வேண்டாம்.

- இப்படிக்கு இளவரசி.

( இதப் பத்தி எதுவும் பேச என்ன நேர்ல சந்திக்க முயற்சி பண்ண வேணாம். அது என்னோட வேதனையக் கண்டிப்பா அதிகப் படுத்தும்! )

----------

“அருள், உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினை இல்லியே? நல்லாத்தானப் போய்கிட்டு இருந்தது”

“ம்ம்ம்…நல்லா தான் போயிக்கிட்டு இருந்தது…ஆனா இப்படி மொத்தமாப் போகப்போகுதுனு அப்போத் தெரியலையே”

ஒரு பியரையும் முழுசாகக் குடித்துவிட்டு, teachersஐயும் ரெண்டு லார்ஜ் கவிழ்த்தான்.

வெளியே வாங்கி வந்திருந்த ஊறுகாய் பாக்கெட்டைப் பல்லால் கடித்து உள்ளேப் பிதுக்கி விட்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

அதுவரை அமைதியாய் இருந்த வினோத் புரியாமல் கேட்டான், “நீ என்னடா சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல!”

“மொதல்ல இருந்தே சொல்றேண்டா! நான் தான் அவகிட்ட மொதல்ல காதலிக்கிறேன்னு சொன்னேன். அவ அதுக்கு மறுத்துட்டதுக்கப்புறம் நான் அவகிட்டப் பேசறதயே நிறுத்தியிருந்தேன். அப்புறம் ஆறு மாசமா அவ எங்கிட்டப் பேசறதுக்கு வந்தப்ப எல்லாம் நான் அவகிட்டப் பேசவே இல்ல. சில சமயம் நம்ம ஃபிரெண்ட்ஸ்ங்க முன்னாடியே அவளத் திட்டியிருக்கேன், ஆனா அவக் கண்டிப்பா என்னக் காதலிப்பான்னு ஒரு நம்பிக்கை மட்டும் இருந்துச்சு”

“இதெல்லாமே நீ சொல்லியிருக்கியேடா , அப்புறம் அவளே வந்து உங்கிட்ட I love you சொன்னதாக இல்ல சொன்ன”

“I love you னு சொன்னா, I will marry you னு சொல்லலையே” விரக்தியில் பேசினான்.

அதற்குள் மேலும் மூன்று லார்ஜ் இறங்கியிருந்தது.

“அவ நல்லப் பொண்ணுதாண்டா… ஆனா அவங்க அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவா… காலேஜ்ல படிச்சப்பவே என்னோட வெளிய எங்கேயும் வந்ததில்ல…அவ்வளவு ஏன் காலேஜ் லைப்ரரி, கேண்டீன விட்டு வேற எடத்துல நாங்க சந்திச்சதே இல்ல! ஒரு வேளை இந்த விஷயத்த வீட்ல சொல்லி அவங்க அப்பா மறுத்துட்டாரோன்னும் என்னால யோசிக்க முடியல… ஏன்னா அவங்க அப்பாகிட்ட இத சொல்ற அளவுக்கெல்லாம் அவளுக்கு தைரியம் கிடையாது! அவருக்கேத் தெரிஞ்சு போயிதான் அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டார்னு நெனைக்கிறேன்! கால் பண்ணாலும் போகல…நம்பர் மாட்டிட்டாப் போல… அவ ஃப்ரெண்ட்ஸ்க்கு கால் பண்ணாலும் கால கட் பண்றாங்க!”

“சரி விடு மச்சி… உன்னக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு கொடுத்து வைக்கல”

“எப்படிடா இத்தன வருசமா உருகி உருகி காதலிச்சுட்டு இன்னொருத்தங்களக் கல்யாணம் பண்ணிக்க முடியும்?” கண்ணீர் வந்தே விட்டது அவனுக்கு. தண்ணீர் ஊற்றி முகத்தைக் கழுவிக்கொண்டான்.

“சாப்பிட்றது , ட்ரெஸ் பண்ணிக்கிறதுனு சின்ன விசயத்துல எல்லாம் எது புடிக்கும் எது புடிக்காது சொல்றப் பொண்ணுங்க இந்த லைஃப் விசயத்துல மட்டும் ஏண்டா இப்படி இருக்காங்க?”

“ஏண்டா எல்லா அப்பாங்களுமே காதல எதிர்க்கறாங்க? அந்தாளு ஏண்டா கவித மாதிரி பொண்ணப் பெத்துட்டு காதலுக்கு எதிரியா இருக்காரு?”

“மச்சிப் போதும்டா… நீ இப்போ போதைல இருக்க, நாம நாளைக்குப் பேசலாம், இப்ப போதும் எந்திரிடாப் போகலாம்”

“நான் இப்பதாண்டாத் தெளிவா இருக்கேன். அந்தாள என்னப் பண்ணனும்னு எனக்குத் தெரியும்டா”

அன்றைக்கு ஒருவழியாய் அவனை அவன் வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்துவிட்டான், வினோத்.

அதற்குப் பிறகு அருளிடம் இதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை.

அந்த வெள்ளிக்கிழமை அருள் அவனுக்கு ஃபோன் பண்ணியிருந்தான்.

“டேய் வினோத் நீ நாளைக்கு ஃப்ரியா?”

“ஏண்டா, ஒன்னும் வேலை இல்ல, சொல்லு!”

“இன்னைக்கு நைட் நாம கோயம்புத்தூர் போறோம் ரெடியா இரு, நான் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்”

இளவரசி வீட்டுக்குத்தான் போகிறான், என்று யூகித்தாலும் எதற்காகப் போகிறான் என்று அவனால் யோசிக்க முடியவில்லை.

அன்றைக்கு போதையில் அவன் பேசியதை நினைத்துப்பார்த்து விட்டு அவனுடன் செல்வதே நல்லதென்று முடிவு செய்தான்.

சனிக்கிழமை காலை ஏழு மணி. கோயம்புத்தூரில் இளவரசி வீட்டின் முன் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

“டேய் இப்பவாது சொல்லுடா, எதுக்கு வந்திருக்கோம்னு”

“உள்ள வந்து கவனி”

அந்த பங்களாவின் உள்ளே நுழைந்தார்கள். முன்புறம் உள்ள புல்வெளியில் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்தான் இளவரசியின் அப்பாவாக இருக்க வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே அவர்களுக்கு தெரிந்தது.

அவரை நெருங்கியதும் அருள் பேச ஆரம்பித்தான்.

“சார், மிஸ்டர் சுந்தரம்…”

“நான் தான் , உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்”

“சொல்லுங்க” பேப்பரை மடித்து வைத்துவிட்டு, அவர்களைக் கவனித்தார்.

( அடுத்தப் பகுதி )

அழுகையோடு ஆரம்பமானது முதலிர

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 3

முதல் பகுதி

“ஒரு ரெண்டு நிமிசம் நான் சொல்றத முழுசாக் கேட்டீங்கன்னா சந்தோசப்படுவேன்…எம்ப்பேர் அருள். நான் காலேஜ்ல இளவரசியோட கிளாஸ்மேட். இப்போ இளவரசிக்கு நீங்க மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு தான் உங்களப் பார்க்க வந்திருக்கேன். உங்களுக்கு மருமகனா வர்றதுக்கு நீங்க என்னத் தகுதிகள் எதிர்பார்க்கறீங்கனு எனக்குத் தெரியாது, நான் என்னோடத் தகுதிய சொல்லிட்றேன். இப்போ நான் சென்னைல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ப்ராஜெக்ட் லீடரா வொர்க் பண்றேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன். எனக்கு எப்பவுமே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லனு சொல்ல முடியாது. காலேஜ்ல ஸ்மோக், ட்ரிங்க்ஸ் பண்ணதுண்டு, ஆனா அதெல்லாம் நிறுத்தி இப்போ 5 வருஷம் ஆச்சு. இது நான் போன வருஷம் ஹெல்த் செக்கப் பண்ணிக்கிட்ட ரிப்போர்ட். அப்புறம் எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல, இருந்தாலும் உங்க திருப்திக்காக இந்தாங்க என்னோட ஜாதகம். இளவரசிக்கூட 7 வருஷமாப் பழகினதுல எனக்கு அவளோட பாஸிட்டிவ், நெகட்டிவ்னு அவளப் பத்தி முழுசாத் தெரியும். நான் இவ்வளோப் பேசறதுனால நானும், உங்கப் பொண்ணும் லவ் பண்றோம்னு நெனச்சிடாதீங்க. இதுவரைக்கும் இளவரசிக்கிட்ட இதப் பத்தி நான் பேசினதில்ல. உங்க அனுமதி இல்லாம அவகிட்ட நான் இதப் பத்திப் பேசறதும் நல்லா இருக்காதுனு நெனைக்கிறேன். இதுல என்னப் பத்தி, என்னோடக் குடும்பத்துல இருக்கவங்களப் பத்தி முழுசா எழுதியிருக்கேன்…படிச்சுப் பாருங்க… கிழிக்கிறதா இருந்தாலும் பரவால்ல, ஒரே ஒரு தடவப் படிச்சுட்டு அப்புறமா கிழிங்க….அதுலையே என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்சோட போன் நம்பர்ஸ் கூட இருக்கு, என்னப் பத்தி முழுசாத் தெரிஞ்சவங்க இவங்க. என்னப் பத்தி விசாரிக்கனும்னா இவங்ககிட்ட நீங்கப் பேசலாம். நீங்க என்ன ஜாதினு எனக்குத் தெரியாதுங்க, அதனால நான் உங்க ஜாதிதானான்னும் எனக்குத் தெரியாது. உங்க statusசுக்கும் நான் சமம்னு சொல்ல முடியாது. ஆனா அவளோட கேரக்டருக்கு நான் பொருத்தமானவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால, உங்களோட statusக்கு ஏத்த மாதிரி உங்க ஜாதியில மாப்பிள்ள பார்க்கிறதுதான் உங்களோட விருப்பம்னா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையப் பத்தி முடிவெடுக்கறதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. நான் என்னோட விருப்பத்த மட்டும் தான் சொல்லியிருக்கேன், முடிவு உங்களோடதாவே இருக்கட்டும். ஒருவேளை நீங்க என்ன நிராகரிச்சா, நான் வந்துப் பேசின விஷயம் எதுவும் இளவரசிக்குத் தெரிய வேண்டாம்!”

சொல்லவந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரிடம் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தைக் கொடுத்தான். ஒரு மாதிரியாக அவனைப் பார்த்துவிட்டுக் கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன், அவரும் படித்து விட்டு அமைதியாகவே இருக்கவும் அவரைப் பார்த்துப் பேசினான்.

“சார் நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்க விரும்பல, ஆனா எங்கம்மாகிட்ட எங்கப்பா எப்படி நடந்துக்கனும்னு நான் விரும்பறனோ, அப்படிதான் என்னோட மனைவிகிட்ட நானும் நடந்துக்குவேன். இதுக்கப்புறமும் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல. நாங்க வர்றோம் சார்”

சொல்லிவிட்டு கேட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“தம்பி ஒரு நிமிஷம்…”

திரும்பிப் பார்த்தார்கள்.

“வீட்டுக்குள்ள வாங்க…” புன்னகையோடு சொன்னார்.

எதையோ எதிர்பார்த்து வந்த வினோத் ஒன்றும்புரியாமல் அவனோடு உள்ளே சென்றான். இளவரசியின் அப்பா, அம்மாவோடு பேசி விட்டு “அடுத்த வாரம் அப்பாகிட்டப் பேசிட்டு உங்ககிட்ட பேச சொல்றேங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது காற்றில் மிதப்பவனை போல இருந்தான் அருள்.விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று இரவு இருவரும் சென்னை திரும்ப ரயிலேறினார்கள். அதுவரைக்கும் எதுவுமேக் கேட்காமல் இருந்த வினோத் வாயைத் திறந்தான்.

“மச்சி ஏண்டா அவர்ட்ட நீங்கக் காதலிச்ச விசயத்த சொல்லவேயில்ல?”

“டேய் எந்த அப்பன்கிட்டப் போய் நான் உங்கப் பொண்ணக் காதலிக்கிறேன்னு சொன்னாலும் அது அவங்களுக்கு நம்ம மேல கோபத்ததான் வரவழைக்கும்… இல்ல உங்கப் பொண்ணும்தான் என்னக் காதலிச்சான்னு சொன்னாலும் கோபம் அப்படியே பொண்ணு மேலத் திரும்பிடும்… என்னமோ உலகத்துலப் பண்ணக்கூடாத பெரியத் தப்ப தான் பொண்ணு பண்ணிட்ட மாதிரி… அதான் சொல்லல”

“சரி அந்த லெட்டர்ல அப்படி என்னதான் எழுதியிருந்த?”

“ம்ம்ம்… I am suffering from love. Please grant me your daughter னு எழுதியிருந்தேன்”

“மச்சி நக்கல் பண்ணாதடா… அதுல ஒரு காப்பி கொடுத்தா நமக்கும் பின்னாடி உதவியா இருக்கும்ல?”

“டேய் கடுப்பக் கிளப்பாத… இந்நேரம் இளவரசிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கனும்… நான் அவ கால் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“அவங்கப்பா கிட்டயே அவ நம்பர வாங்கியிருக்கலாம்ல”

“போடாங்க… 7 வருச ஃப்ரெண்டுனு சொல்லிட்டு… மொபைல் நம்பர அவர்கிட்டயேக் கேட்க சொல்றியா?”

“சாரி”

ரொம்ப நேரம் படியிலேயே அமர்ந்திருந்தவன், கடைசி வரை அவளிடமிருந்து கால் எதுவும் வராததால், வந்து படுத்துக் கொன்டான், செல்போனைக் கையில் பிடித்தபடியே.

அடுத்த இரண்டு நாட்களும் அவளிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோனான். தன்னுடைய வீட்டில் இந்த விசயத்தை எப்படிக் கொண்டுபோவது என்பதும் பெரும் கவலையாகவே இருக்க, இரண்டு நாள் வேலை பார்த்தவன், மூன்றாம் நாளே ஊருக்குக் கிளம்பினான். அப்பாவிடம் நேரடியாக இதை எப்படி சொல்வதெனத் தெரியாமல் துணைக்கு அக்காவையும் அழைத்துக் கொண்டான். அப்பா வேலைக்கு போன பின், அக்கா மூலமாக, அம்மாவுக்கு விசயத்தை முதலில் சொல்ல அம்மா குதித்த குதியில் இருவரும் ஆடிப்போனார்கள். அவன் அம்மாவுக்கு எவ்வளவு வேகமாக கோபம் வந்ததோ, இரண்டு பேரும் பேசப் பேச அவ்வளவு வேகத்திலேயேக் குறைந்தது.

“நான்லாம் உங்கப்பாகிட்டப் பேச மாட்டேண்டா… நீயாச்சு உங்கப்பாவாச்சு” என்று சொன்னவள், “எல்லாம் பெரிய மனுசனாயிட்டாங்க நாம சொல்றத இனிமே எங்க கேட்கப் போகுதுங்க” என்று முனக ஆரம்பித்தாள்.

“ம்மா… அந்தப் பொண்ணும் உன்ன மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணுதாம்மா” – என்கிற ரீதியில் ஐஸ் வைக்க ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட அம்மாவை சமாளித்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் அப்பாவை நினைத்தாலே பயமாக இருந்தது.

அவன் எப்போதுமே அம்மா செல்லம் தான். அப்பாவிடம் அளவுக்கு அதிகமாகப் பேசுவதில்லை.

அக்காவிடம் சொன்னான், ”க்கா… அப்பாகிட்ட நீதான் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கனும்…”

“அப்பாகிட்ட விஷயத்தக் கொண்டு போறது வரைக்கும்தான் என்னோட வேல… அதுக்கப்புறம் அவர சம்மதிக்க வைக்கிறது உங்கைல தான் இருக்கு”

இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தப் பிறகு, அவன் அக்கா மெதுவாக அப்பாவிடம் விசயத்தைச் சொல்ல… கேட்டு முடித்தவர் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். அவன் தரையைப் பார்த்தான். அவராக எதுவும் கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தான்.

“கொஞ்சம் தண்ணிக் கொடும்மா”

“நம்மத் தலைல தெளிச்சு வெளிய அனுப்பிடுவாரோ” என்று பயத்தோடே இருந்தான்.

தண்ணீரை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்தார்.

அக்கா அவளைப் பார்த்து “எதாவது பேசுடா” என்ற அர்த்தத்தில் முறைத்தாள்.

“அந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நான் சொல்லல… கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும்” நிமிராமல் பேசினான்.

“எங்களுக்குப் பிடிக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?” - அவன் அப்பா.

“உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே எனக்கு ஒருப் பொண்ணப் பார்த்தாலும், எனக்கும் அந்தப் பொண்ணப் பிடிக்கும்னு நீங்களே முடிவுபண்ணிதானப் பாப்பீங்க” – சத்தமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமிருந்து சத்தம் அதிகம் வரவில்லை.

“நாங்க ஒரு பொண்ணுப் பார்த்து அது உனக்கு பிடிக்கலன்னா… கண்டிப்பா வேற பொண்ணதான் பாப்போம்… ஒரேப் பொண்ணக்காட்டி இவளதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லமாட்டேன்”

“நீங்க வந்து அந்த பொண்ணப் பாருங்க…அவங்க அப்பாகிட்டப் பேசுங்க… உங்களுக்குப் பிடிக்கலன்னா அதுக்கப்புறம் நான் எதுவும் சொல்லல”

“ப்பா… அந்தப் பொண்ண எனக்கு நல்லாத் தெரியும்ப்பா… என்னோடக் கல்யாணத்துக்கு வந்திருக்கு… நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லாதான் பேசினா… ஒரு தடவ நீங்கப் போய்ப் பார்த்துட்டு வர்றதுல என்ன இருக்கு” – அவன் அக்காவும் துணைக்கு வந்தாள்.

ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் இருந்தவர் , சொன்னார், “சரி இந்த ஞாயித்துக் கிழமை வர்றோம்னு அவங்க கிட்ட சொல்லிடு… பொண்ணு ஃபோட்டோ இருக்கா?”

“நான் என்ன அவள லவ்வாப் பண்றேன் போட்டோ வச்சிக்கிறதுக்கு… அக்கா கல்யாண ஆல்பத்துல இருப்பான்னு நெனைக்கிறேன்” - தான் அவளைக் காதலிக்கவில்லை என்று நம்பவைக்க பொய் சொன்னான்.

எப்படியோ தன்னுடைய வீட்டிலும் பாதி சம்மதிக்க வைத்துவிட்டதில் சந்தோசமாய் இருந்தாலும் இளவரசியிடம் இன்னும் பேசாமலே இருப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது. சென்னை திரும்பிய பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்று எங்கு போனாலும் செல்லைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தான். அன்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் செல் அலறியது.

( நிறைவுப் பகுதி )

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

( முதல் பகுதி )

“ஹலோ, நான் வினோத் பேசறண்டா”

“ம்ம்ம்… சொல்றா, உயிரோடதான் இருக்கியா?” சலிப்பு + கோபத்துடன் கேட்டான் அருள்.

“மச்சி போனவாரம் வந்தவுடனே ஆஃபிஸ்ல கொல்கத்தா அனுப்பிட்டானுங்கடா இன்னைக்குதான் வர்றேன்.. சாரிடா போறதுக்கு முன்னாடி கால் பண்ண முடியல”

“சரி சரி ஈவினிங் ஃப்ரியா இருந்தா வீட்டுப் பக்கம் வா”

“வர்றேன் வர்றேன்… இளவரசிகிட்ட இருந்து எதுவும் கால் வந்துச்சா? என்ன சொன்னா? எப்படி ஃபீல் பண்ணா”

“காலும் வரல.. கையும் வரல… நீ ஈவ்னிங் வா நேர்லப் பேசிக்கலாம்”

வினோத்துக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது.

அன்று மாலையே வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அருள் வீட்டுக்கு வந்தான்.

மாடியில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.

“டேய் என்னடா தனியா மொட்டமாடியில உட்காந்திருக்க?”

தன்னுடைய வீட்டில் விசயத்தைச் சொல்லி பாதி சம்மதம் வாங்கியது, இளவரசி இன்னும் அவனிடம் பேசாதது எல்லாம் சொல்லி முடித்தான்.

“அவ கிட்டப் பேசனும் போல இருக்குடா”

“அதான் இந்த வாரம் நேர்ல சந்திக்கப் போறீங்கல்ல.. அப்போ நேர்லையேப் பேசிக்க வேண்டியதுதான?”

“நேர்லப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவதுப் பேசலாம்னு பாத்தேன் ”

“சரி இரு நம்ம ஜூனியர் பசங்க மூலமா ட்ரை பண்ணிப் பாக்கறேன்”

கல்லூரி ஜூனியர் ஒருவனை அழைத்து அவன் மூலம் இன்னொரு பெண் நம்பர் வாங்கி, அவளிடம் ஒரு பொய்யை சொல்லி இளவரசி நம்பரை வாங்கிக் கொண்டான்.

“ஜாப் விஷயமா.. அப்டி இப்டி னு சொல்லி அவ நம்பர் வாங்கியாச்சு… ந்தா ட்ரை பண்ணு”

“மச்சி… நீயே மொதல்லப் பேசுடா… அவங்கப்பா விசயத்த அவகிட்ட சொல்லிட்டாரா இல்லையான்னு தெரியல… நான் பேசினா உடனே கட் பண்ணிட்டான்னா?”

“சரி இரு நானேக் கால் பண்றேன்”

“ஹலோ இளவரசி… நான் வினோத் பேசறேன்”

“வினோத்?”

“சுத்தமா மறந்தாச்சா? ‘மாடு’ வினோத் பேசறேன்… இப்பவாது ஞாபகம் இருக்கா?” .கல்லூரியில் அவன் செல்லப் பெயர் ‘மாடு’.

“ஹே சாரிப்பா… நீ எப்படியிருக்க? இப்போ எங்க இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்.. இப்போ சென்னைல இருக்கேன்… சரி ஒரு நிமிசம், அருள் பக்கத்துல தான் இருக்கான்.. உங்கிட்டப் பேசனுமாம்… இரு கொடுக்கறேன்” அவள் இயல்பாகவே பேசுவதைக் கேட்டு விட்டு செல்லை அருளிடம் கொடுத்தான்.

செல்லை வாங்கியவன் அவள் பேசட்டுமென்று செல்லைக் காதில் வைத்து அமைதியாகவே இருந்தான்.

அந்தப் பக்கம் இன்னும் அமைதியாகவே இருக்கவும், அவனே “ஹலோ…” என்றான்.

பதில் எதுவும் இல்லை. மறுபடி மறுபடி ஹலோ… ஹலோ… என்று சொல்லிப் பார்த்தும் பயனில்லை.இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

“கால கட் பண்ணிட்டாடா”

“சரி போன்ல எதுக்குப் பேசிக்கிட்டு? எல்லாத்தையும் நேர்ல பாக்கும்போது பேசிக்க… ஓக்கேவா? சரி நான் கிளம்பறேன்… எதுவா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுடா”

“ம்ம்.. போயிட்டு வந்து கூப்பிட்றேன்”

தானே அழைத்தும் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவனுக்கு வேதனையாக இருந்தது. அன்றிரவு முழுவதும் எதை எதையோ நினைத்துக்கொண்டேப் படுத்திருந்தவன் விடிந்ததும் தூங்கிப் போனான். நேரில் பார்ப்பதற்குமுன் ஒருமுறையாவதுப் பேசிவிட வேண்டுமென்று நினைத்து அவள் செல்லுக்கு அழைக்கும்போதெல்லாம் முதல் முறை யாருமே எடுப்பதில்லை. அடுத்தமுறை அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும்.

அவள் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்ற கவலையை விட ஏன் கோபமாய் இருக்கிறாள் என்றக் குழப்பமே அவனை அதிகமாக வாட்டியது.

அடுத்த வாரம் இரு குடும்பமும் சந்தித்த போது, அவனுடைய அப்பாவும் அவளுடைய அப்பாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற விசயம் தெரிய வர, நண்பர்களே சம்பந்திகளாவதில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். இரண்டு குடும்பத்திலும் எல்லோருக்குமேப் பிடித்துப் போக அப்பொழுதே அடுத்த மாதத்தில் திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. பெண் பார்க்க வருவதற்கு மட்டும் ஒத்துக் கொண்ட அப்பா, கடைசியில் திருமணத்தையே முடிவு செய்தது அவனுக்கு ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் இளவரசி வீட்டில் இருந்த அன்று முழுவதும் இளவரசியிடம் தனியாகப் பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவளுடைய அப்பாவிடம் தான் பேசியபோது அவர்கள் காதலித்ததை அவன் சொல்லவே இல்லை என்பதும், அவர்கள் நண்பர்களாக தான் பழகினார்கள் என்று சொன்னதும் அவளுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்றவர்களும் “அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம சம்மதம் சொல்லிட்றதுதான் மரியாதை” என்ற ரீதியில் பொதுவாகவேப் பேசிக்கொண்டிருக்க அவனால் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு பேர் வீட்டிலுமே அவனால் இதைக் கேட்க முடியாத நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்ச்சி இருப்பதை மட்டும் அவனால் கவனிக்க முடிந்தது. அது சோகமா தன் மேல் இருக்கும் கோபமா எனத் தெரிந்து கொள்ள முடியாமலேயே சென்னைக்குத் திரும்பி விட்டான்.

மெரீனாக் கடற்கரை.

“மச்சி உனக்கு எங்கேயோ மச்சமிருக்குடா… எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா முடிச்சிட்ட… அடுத்த மாசம் குடும்பஸ்தனாகப் போற…” சிரித்துக் கொண்டே சொன்னான் வினோத்.

“டேய் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்குடா… நாந்தான் அவங்கப்பாகிட்டப் போய் அப்படியெல்லாம் பேசினேனா? எங்கப்பா கிட்ட எந்த விஷயமும் ஓப்பனா நான் பேசினதேயில்ல… எந்த தைரியத்துல அவர்ட்ட பேசினேன்னும் தெரியல… இளாவ விட்டுப் பிரிஞ்சிடுவேனோன்ற பயமே எனக்கு தைரியமா மாறிடுச்சுனு நெனைக்கிறேன்”

“அதான் எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏண்டா பழையக் கதையெல்லாம்?”

“இல்லடா… யாரால எல்லாம் காதலுக்குப் பிரச்சினை வரும்னு நெனச்சனோ அவங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டாங்க… ஆனாக் காதலிக்கிறப் பொண்ணே இப்பக் கண்டுக்கலன்னா… கஷ்டமாருக்குடா”

“மச்சி நீ ஃபீல் பண்ணாத… நான் அவ ஃப்ரெண்டுகிட்டப் பேசி அவ மனசுல என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்குறேன்…நீ கல்யாண வேலைய மட்டும் பாரு… எல்லாம் நல்லபடியா முடியும்”

அருளுக்கு,அவன் பேசுவதுக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது.

அந்த ஒரு மாத இடைவெளியிலும் கூட அவன் இளவரசியோடு எதுவும் பேசமுடியவில்லை. வீட்டிலிருப்பவர்களிடமும் அதை சொல்ல முடியாத நிலை. அந்த விசயம் மற்றவர்களுக்குத் தெரியாமலும் சமளித்துக் கொண்டான். திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றிலுமே அவனை சந்திக்காமல் தப்பித்துக் கொள்ளவேப் பார்த்தாள். சந்திக்க வேண்டிய நிலையிலும் கூட நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதை அவள் தவிர்ப்பது அவனுக்குப் புரிந்தது. திருமணம் முடிந்தபிறகு தன்னிடமிருந்த அவள் தப்பிக்க முடியாது என்றெண்ணியவன், எந்தக் கோபமாக இருந்தாலும் திருமணம் முடிந்தபிறகு அவளிடம் கேட்டு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான்.திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு. திருமண மண்டபத்தில், மணமகன் அறையில் நண்பர்கள் எல்லோரும்போன பிறகுத் தனிமையில் இருந்தவன் தன்னுடையப் சூட்கேஸில் தேடி, அதையெடுத்தான்.

அவனுக்கு அவள் எழுதியக் கடைசிக் கடிதம். மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தான். கண் லேசாகக் கலங்கியது.

“எப்படி இளவரசி உன்னால இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சாதாரணமா சொல்ல முடிஞ்சது? காதலிக்கிறப்ப பேசின வார்த்தையெல்லாம் ஆயுசுக்கும் மறக்காதே? அப்போ செஞ்ச சத்தியமெல்லாம் காத்தோடப் போகட்டும்னு விட்டிருந்தியா? எவ்வளவு கனவு கண்டோம்… எல்லாத்தையும் கனவாவே நெனச்சுக்கலாம்னு விட்டுட்டியா? எப்படி இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுத உனக்கு மனசு வந்தது?” அவளிடம் கேட்பதாக நினைத்துக் கொண்டு கடிதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மடித்து வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி மறுபடி மனசுக்குள் பேச ஆரம்பித்தான்.

“இளவரசி, இப்ப உனக்கு எம்மேல என்னக் கோபம்னு எனக்குத்தெரியல… உங்க அப்பாவே சம்மதம் சொன்ன பின்னாடி நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்… ஆனா இப்பவரைக்கும் நீ எங்கிட்டப் பேசாம இருக்கிறது ஏன்னே எனக்குப் புரியல… உன்கிட்ட சொல்லாமலயே உங்கப்பாகிட்ட வந்து பேசிட்டேன்னுக் கோபமா? நாமக் காதலிச்ச விசயமே அவருக்குத் தெரியாதே… அது உனக்கு தெரியுமா தெரியாதான்னும் என்னால தெரிஞ்சிக்க முடியல… ஒரு தடவையாது எங்கிட்டப் பேசியிருந்தீன்னா எல்லாத்தையும் சொல்லியிருப்பேன்…மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சுட்டு இன்னொருத்தரோட வாழ என்னால முடியாதும்மா… அதனாலதான் உங்கிட்ட சொல்லாமலேயே உங்கப்பாகிட்ட நேர்ல வந்து பேசிட்டேன்… என்ன மன்னிச்சுடு! நாமக் காதலிச்ச விசயத்த உங்கப்பாவுக்குத் தெரிய வச்சு, உம்மேல அவருக்கு இருந்த நம்பிக்கைய இல்லாமப் பண்ணிட்டனோன்னு என்னத் தப்பா நெனச்சிக்கிட்டு இருந்தாலும் பரவால்ல… எல்லா விவரத்தையும் நாளைக்கு சொல்லிட்றேன்… நாளைக்காவது என்னோட பேசுவியா?” அவன் குழப்பத்தில் இருப்பது அவனுக்கேத் தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தமில்லாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் மனதை மாற்ற, கதவைத் திறந்து பாலக்னி பக்கம் போனான்.அப்போது மணமகள் அறையில் இருந்து ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழ ஆரம்பித்தது.

இளா! உனக்கு அருள் மேல இவ்வளவு நம்பிக்கையாடி? ஒரு வேளை உன்னோட லெட்டரப் பார்த்துட்டு சரி எங்கிருந்தாலும் வாழ்கனு போயிருந்தார்னா என்னப் பண்ணியிருப்ப”

“அதெப்படிப் போக முடியும்? லவ்வர்ஸ்க்கு காதல விட அதிகமா இருக்க வேண்டியது நம்பிக்கை! எங்கிட்ட அருள் காதல சொன்னப்ப நான் மறுத்தாலும் ஆறு மாசமா எங்கிட்டப் பேசாமலே எந்த நம்பிக்கைல அவன் காத்திட்டிருந்தான்? அதே நம்பிக்கைல தான் நானும் அப்படி ஒரு லெட்டர் எழுதினேன்! நானாவது ஆறு மாசம் கழிச்சுதான் என்னோட லவ்வ சொன்னேன், அருள் பார்த்தியா லெட்டரப் பார்த்த அடுத்த வாரமே எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டான். என்ன விட அவனுக்கு தான்டி எம்மேல காதல் அதிகம்! அதுவும் நாங்க லவ் பண்ண மாதிரி எங்கப்பாகிட்ட அவன் காட்டிக்கவே இல்ல! அதனாலேயே எங்கப்பாவுக்கு அவனப் பிடிச்சுப் போயிருக்கும்!”

“அடிப்பாவி அருள டெஸ்ட் பண்றதுக்குதான் இப்படி சீரியஸா ஒரு லெட்டர் எழுதினியா?”

“சீச்சீ…எனக்கு அருளப் பத்திதான் முழுசாத் தெரியுமே அப்புறமென்னப் புதுசா டெஸ்ட் பண்ணப்போறேன்? இன்னமும் அவனுக்கு அந்த inferiority complex மட்டும் போகல. நான் பல தடவை எங்கப்பாகிட்ட வந்து பேசுன்னு சொல்லியும் என்னதான் பேச சொன்னானேத் தவிர அவன் வந்து பேசறேன்னு சொல்லல. எங்க வீட்ல வேற, ஜாதகத்தப் பாத்துட்டு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு சீரியசா அலையன்ஸ் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன். அதுவும் சரியா வொர்க் அவுட் ஆயிடுச்சு! பின்ன என்னடி வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்கவே தைரியமில்லாதவன எந்தப் பொண்ணோட அப்பாவுக்கு தான் பிடிக்கும்?”

“அது சரி நீ அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன்னு சொன்னவுடனே நானே உண்மையாதான் இருக்குமோன்னு நெனச்சிட்டேன். நீயும் காலேஜ்லேயே அருள்கிட்டப் பட்டும் படாமதானப் பழகின!”

“ம்ம்… வெளியில அப்படித் தெரிஞ்சிருக்கலாம்… ஏன்னுத் தெரியல அருளுக்குப் பணக்காரங்களப் பார்த்தாலேக் கொஞ்சம் அலர்ஜி. அதான் நானும் சினிமா, ரெஸ்டாரண்ட்னு அவன வெளியில கூட்டிட்டு சுத்தியிருந்தேன்னு வச்சிக்கோ, என்னையும் பிடிக்காமப் போயிடுச்சுன்னா என்னப் பண்றதுன்னு பயந்துட்டேன். எனக்கும் அதுல இஷ்டம் இல்லாததும் ஒரு காரணம்”

“அதெல்லாம் சரி, ஆனா ஒரு நாள் அருள்ட்ட ஃபோன்ல பேசலன்னாக் கூட மூடவுட் ஆன மாதிரி இருப்ப, எப்டி அவ்ளோ நாளாப் பேசாம இருந்த???”

“தினமும் மனசுக்குள்ளேயே சாரி கேட்டுக்கிறதத் தவிர வேற என்னப் பண்ண முடியும்? தனக்குப் பிடிச்சது தன்ன விட்டு விலகிப் போறப்பதான எவ்வளவுக் கஷ்டப்பட்டாவது அத அடையனும்னு தோணும்? அதனாலதான் பேசாம இருந்தேன்”

“அதுக்காக… எல்லாம் நல்ல படியா முடிஞ்சபின்னாடியுமா அலையவிடனும்?”

“அவன் வந்து எங்கப்பாகிட்டப் பேசிட்டுப் போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவன்ட்டப் பேசனும்னுதான் துடிக்கிறேன்… ஆனா இவ்வளவு நாள் பேசாம இருந்து அருளக் கஷ்டப்படுத்திட்டு இப்போ பேசனும்னு நெனச்சா வார்த்தை வர்றதுக்கு முன்னாடி எனக்கு அழுகதான் வருது, அதனாலேயே அவனப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டு இருந்தேன்! ரொம்ப கஷ்டமா இருக்குடி” விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏ..ஏ…இன்னைக்கு அழாதம்மா…நாளைக்குப் போய் உன் ஹப்பிய கட்டிப்புடிச்சு அழுதுக்கோ…இப்ப தூங்கு நானும் தூங்கப் போறேன்”

“ஆமாக் கண்டிப்பா நாளைக்கு first nightல அவனக் கட்டிப்பிடிச்சு அழத்தான் போறேன்” கண்ணீரோடு் சிரித்தாள்.

தன் மேல் உள்ளக் கோபத்தில்தான் பேசாமள் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, தான் கோபப்படுவேனோ என்றுதான் அவள் பேச முடியாமல் இருக்கிறாள் எனத்தெரிந்ததும் கவலை குறைந்தது.

“நீ சரியான லூசுடி” என்று நினைத்துக்கொண்டே கனவோடுத் தூங்கினான்.

அடுத்த நாள், திருமணம் முடிந்தது. முதலிரவு அறை. அருளைப் பார்த்ததும் பொங்கி வந்த அழுகையோடு அவனை நெருங்குகையில், அவனும் கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல், அழுதுகொண்டே அவனைக் கட்டிப்பிடித்தாள் இளவரசி. அழுகையோடு ஆரம்பமானது ஒரு முதலிரவு.

( முற்றும் )

பொங்கலோப் பொங்கல்!

பொங்கலோப் பொங்கல்!

பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்.


உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்

பொன்பொங்கலானது.


வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?

வாசனையோடு இருக்கிறது!


மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.

கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!


ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.

எனக்குள் நடக்கிறது

மயில் விரட்டு!

சுகமானப் பயணம்!

சுகமானப் பயணம்!

ஜன்னலுக்கு வெளியே பசுமையான வயல்வெளி
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்


கவலை மறந்த கல்லூரிக் காலம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்


அழகாய் வளைந்து செல்லும் மலைப்பாதை
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்


தூரத்து ஊரின் கோவில் திருவிழா
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்


என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!

ஒரு காதல் பயணம் - 3

ஒரு காதல் பயணம் - 3

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு



நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!

அதற்கு மறுநாள், வரிசையாக பூக்கடைகள் இருக்கும் அந்தக் கோயில் தெருவுக்குள் நீயும் உன் தங்கையும் வருகிறீர்கள்.
பூ வாங்க யாரும் வந்தால் வழக்கமாக கூவிக் கூவி அழைக்கும் கடைக்காரர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விட்டு ,
கோவிலில் இருந்த ஒரு சிலைதான் வெளியே உலா வருகிறது என வாயடைத்து இருக்கிறார்கள், என்னைப் போல.

கடையில் இருக்கும் பூக்களோ, “என்னை எடுத்துக்கோ”, “என்னை எடுத்துக்கோ” என உன்னிடம் கூப்பாடு போடுகின்றன.
மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.

நீ வரும் வரை தெரு முனையில் காத்திருக்கிறோம், நானும், நம் காதலும்.
எங்களைப் பார்த்ததும் “இங்கேயும் வந்தாச்சா?” என பதட்டப்படுகிறாய்.
“எல்லாப் பக்கமும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுள் மட்டுமல்ல , நானும்தான்” என சொல்கிறது காதல்.
“உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என காதலை முறைத்து விட்டு நீ என் பக்கம் திரும்புகிறாய்.

“இன்னைக்கு என்னவெல்லாம் புலம்பப் போறீங்க?” எனக் கிண்டலாகக் கேட்கிறாய்.
“புலம்பல் எல்லாம் எதுவும் இல்லை, ஒரு புகார் மனு தான் வாசிக்கனும்” என்கிறேன் நான்.
“புகாரா? நான் என்ன தப்பு பண்ணேன்?” என மெய்யாகவேப் பயப்படுகிறாய்.

“உன் மேல் புகார் சொன்னால், காதல் என்னைக் கைவிட்டுடாதா! புகார் எல்லாம் என் இதயத்தின் மீது தான்! என் இதயத்தில் குடியேறி விட்டதாக நேற்று நீ சொன்னாலும் சொன்னாய். அதிலிருந்து என் இதயத்திற்கு தலை கால் புரிய வில்லை. ஒரே மமதையுடன்தான் சுற்றுகிறது” எனப் புலம்ப ஆரம்பிக்கிறேன், நான்.

“அது செய்யும் அட்டூழியங்களை நீயேக் கேள் :
நேற்று இரவு நான் தூங்கப் போன போது இது என்ன சொல்லியது தெரியுமா?
உன் தேவதை இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கனவு வரும் நேரம் இது.
அவள் கனவில் நீ தானே இருக்க வேண்டும்! அதனால் ஓடு, ஓடு, என என்னை உன் கனவுக்குத் துரத்தியது.
உன் கனவுக்குள் நுழையும் ஆசையில் நானும் அதைச் செய்தேன்.
பிறகு ஒரு வழியாக நான் தூங்கிய போது கூட என் கனவுக்கு வந்த எல்லாரையும் காக்க வைத்து விட்டு,
உன்னை மட்டுமே உள்ளே அனுமதித்தது!
இப்படி நேற்று இரவு மட்டும் அது எத்தனை அட்டூழியங்களை செய்தது தெரியுமா?” என நான் சோக கீதம் வாசிக்கிறேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு இன்றைக்குப் புலம்பல் நீளும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு
“வாங்க, இங்க உட்கார்ந்து பேசுவோம்” என கோயிலின் வெளி சுற்றுத் திண்ணையில் அமர்கிறாய்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “ ம்…அப்புறம்?” என அதன் அடுத்த அட்டூழியத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாய்.

“குளிக்கப் போனால், தேவதை குளிக்கிறாள்! நீ இரு!” என என்னைத் தடுக்கிறது.
“சாப்பிடும்போது கூட , தேவதைக்குப் போதுமாம்! நீ எழு!” என என்னைப் பாதியிலேயே எழுப்புகிறது.
இப்படிக் கொஞ்ச நாள் முன்பு வரை என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் இதயம்,
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உன் புராணம்தான் பாடுகிறது.
நான் என்ன சொன்னாலும், தேவதை சொல்வதைத்தான் நான் கேட்பேன் என அடம்பிடிக்கிறது.
அதனால்தான் என் இதயத்தை உன்னிடம் இழுத்து வந்து விட்டேன்.
அதனிடம் நீயேக் கேள்” என முழுதாய்க் கொட்டித் தீர்த்தேன்.

இதழோரம் ஒரு குறுநகையுடன் என் இதயத்தில் உன் காது வைக்க வருகிறாய்.
“ஏய்…ஏய்…என்ன செய்ற?”
“நீங்க தான “கேட்க” சொன்னீங்க…அதான் கேட்கிறேன்”
“நான் அதுகிட்ட, என்னன்னு கேள்வி கேட்க சொன்னா…நீ அது சொல்றத காது கொடுத்துக் கேட்கப் போறியே?
கடைசியில நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்கப் பாத்தீங்களா” என நான் அப்பாவியானேன்.

“இல்லங்க…மொதல்ல அது என்ன சொல்லுதுன்னுக் கேட்டுக்கலாம், அப்புறமா அத நாலு வார்த்த நறுக்குன்னு நானேக் கேட்கிறேன்”
மறுபடியும் இதயத்தில் காது வைக்கிறாய்.

என் இதயமோ, “ பொய் சொல்றான், பொய் சொல்றான், நம்பாத…எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டுப் பழிய எம்மேலப் போடப் பார்க்கிறான்” என உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாக கிசுகிசுக்கிறது.

இதயத்தில் இருந்து காதை எடுத்த நீ, ஓரக் கண்ணில் என்னைப் பார்த்து விட்டு,
என் இதயத்தை நோக்கி, “ இதோ பார் இதயமே, நான் உன்னில் வசிக்க வந்ததற்குக் காரணமே அவர்தான்.
அவர் சொல்வதை நீ கேட்காவிட்டால் அப்புறம், உன்னை விட்டே நான் விலகி விடுவேன்”
என்று அதைக்கொஞ்சம் மிரட்டிவிட்டு, பாசாங்கு தான் என, அதைப் பார்த்துக் கண்ணடிக்கிறாய்.

“என் இதயம் முதலில் உன்னிடம் ஏதோ சொல்லியதே, என்ன சொன்னது?” என ஆர்வமாகிறேன் நான்.
“அது உங்கள் மேல் ஒரு புகார் சொல்லியது” என்கிறாய்.
“என் மேலா? என்னப் புகார் சொல்லியது?”
“ஆமாம், நான் மட்டும் தான், முதல் நாளே உங்கள் இதயத்தில் குடியேறினேன்.
ஆனால் நீங்கள் இன்னும் என் இதயத்துக்குள் நுழையவில்லை இல்லையா,
அதைத்தான் குத்திக் காட்டுகிறது” என உனது புகாரை என் இதயம் சொன்னதாக சொல்கிறாய்.
உன் நடிப்பைப் பார்த்து என் இதயம் கூட ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

“அதுதானா? நீயே மென்மையானவள். உன் இதயமோ உன்னையும் விட மென்மையானது.
அதில் வசித்துக் கொண்டு நான் என்னுடைய முரட்டுக் காதல் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்ய முடியாது
– அதை உன் இதயமும் தாங்காது.
அதனால்தான் என் காதலை முழுவதுமாக உன் இதயத்துக்குப் பழக்கப் படுத்திவிட்டு,
‘காதல்’ குறித்துக் கொடுக்கும் ஒரு நல்ல நாளில் என் இதயப்பிரவேசம் நிகழும்” என சொல்கிறேன் நான்.

நான் பேசி முடித்தப் பின்னும் கண்ணிமைக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த உன் தங்கை,
உன்னிடம் மெதுவாக சொல்கிறாள் : “அக்கா! இந்த லூசு மாமா உனக்கு வேணாங்க்கா!”
உன் தங்கையிடம் சத்தமாக நீ சொல்கிறாய் :
“ உன்னோட லூசு அக்காவுக்கு இந்த மாமாவ விட்டா, வேற எந்த நல்ல லூசுடி கிடைப்பாங்க?”

“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.

( காதல் பயணம் தொடரும் )