Thursday, February 15, 2007

தனிப்படர் மிகுதி


உன் நட்பில் விளைந்து
உன்னைக் காதலிக்கும்போது மலர்ந்து
உன்னால் காதலிக்கப்படும்போது கனிகிறது
என் காதல்!


தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.


கோடைமழையைப் போல
நிகழ்கிறது நம் சந்திப்பு…
சந்திக்கும்போதெல்லாம்
அடைமழையாய்ப் பொழிகிறது
காதல்!



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.


காதலில்லாத
இல்வாழ்க்கை…
வாழ்க்கையில்லை!


வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.


நீ பிரிந்து போனதிலிருந்து
உன்னிடம் கோபித்துக் கொண்டு
என்னிடம் வந்துவிட்டது
நம் காதல்!


வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.


நீ காதலிக்காவிட்டால் பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே காதலித்து விட்டுப் போகிறேன்…

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?


நானுன்னைக் காதலிக்க...
நீயென்னைப் பிரிய...
ஊனமாய் நிற்கிறது!
நம் காதல்...

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது.

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.


இந்தக் காதலும்
பெண்பால்தான் போல...
எல்லாத் துயரையும்
எனக்கேத் தருகிறது!

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!


உன் வார்த்தைகளைக் கேட்க முடியாமல்,
மரணித்தது என் செவி மட்டுமல்ல...
இதயமும்தான்!


வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.


நீ துரத்த துரத்த
உன் பின்னேயே வருகிறது இந்த மனம்…
நீ வளர்க்கும்
செல்ல நாய்க்குட்டியைப் போல!



நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு.

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.


கடலலைகளைக் கூட எண்ணிவிடலாம்.
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
என் நினைவலைகளை?


உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்

அழியாத அன்புடன், Praba

No comments: