ஒரு பார்வையில் சாம்பலாக்குகிறாய்…
மறு பார்வையிலோ
ஃபீனிக்ஸ் பறவையாய் மாற்றுகிறாய்!
இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
என் காதல் கடலென்றிருந்தேன்…
அரைக்கண்ணில் பார்க்கும்
உன் கள்ளப் பார்வையில்
என் முழுக்காதலும் ஒரு துளியானது!
கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.
உன் பார்வையில்
மழையாய்ப் பொழிகிறதென் ஆண்மை!
என் பார்வையில்அருவியாய்
வழிகிறது உன் வெட்கம்!
மழையிலும் அருவியிலும்
நனைகிறது நம் காதல்!
நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.
என்னை நோக்கினாள்; யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
உன்னைப் பார்க்கிறேன்…
மண்ணைப் பார்க்கிறாய்!
விண்ணைப் பார்க்கிறேன்…
என்னைப் பார்க்கிறாய்!
என்னுள் சேர்த்தப் புன்னகையோ
உன்னுள் பூக்கிறது வெட்கத்தோடு!
யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்.
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
அரைக்கண்ணில் பார்த்தே
முழு உயிரையும் குடிக்கிறாய்.
இன்னும் நேராய்ப் பார்த்தால்?
குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
என்னை நேராக குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.
காதலைத் தவிர
எல்லாவற்றையும் பேசுகிறாய்.
ஆனால் காதலோடு!
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
நீ ஒளித்து ஒளித்து வைத்தாலும்
உன் பொய்க் கோபத்திலும் செல்ல முறைப்பிலும்
மெல்ல மெல்ல வெளிப்படுகிறது
உன் காதல்.
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் னூற்றார் குறிப்பு.
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
நீ சிரிப்பது அழகு.
என்னைப் பார்த்து சிரிப்பது பேரழகு.
நான் பார்க்கும்போது சிரிப்பதின் அழகை
வருணிக்க ஒரு வார்த்தைக் கொடு.
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்காப்
பசையினள் பைய நகும்.
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
பார்த்தும் பார்க்காமல் என் பார்வை,
பார்க்காததைப் போல பார்க்கும் உன் ்பார்வை,
காதல் நடத்துகிறது கண்ணாமூச்சி!
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.
பார்வைகளே பாசையானபின்
வார்த்தைகள் வந்தும்
என்ன செய்யும்?
கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.
கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
நண்பர்களே இது திருக்குறளுக்கான உரையுமல்ல, மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கான மொழிபெயர்ப்புமல்ல. ஏனென்றால் திருக்குறளின் பொருள் பார்த்து மட்டும் நான் இதை எழுதவில்லை. ஏதாவது ஒரு கருவை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
1 .தகையணங்குறுத்தல்வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
எப்பொழுது பெண்ணாவாய்?
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு
தெய்வப் பெண்ணோ!மயிலோ?கனமாக குழை(காதணி) அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!உன்னைப் பார்க்கையில்,உன்னழகே இப்படித் தாக்குகிறதே…
நீ எதிர்பார்வையெல்லாம் பார்த்தால், என்னால் முடியாதடி!
அது உன் தலைமையில் ஒரு தேவதைப்படையே தாக்குவதைப்போல…
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
இவள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்தும் ஓர் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.எமன் எப்படியிருப்பான்?
உன் வெட்கப் பார்வை வீசும் ‘பாச’க்கயிறு
உயிரை இறுக்கும் போது புரிகிறது.
உன்னைப் போலதான் இருப்பாள்!
பண்டெறியேன் கூற்றெ பதனை இனியறிந்தேன்பெண்டகையாற் பேரமர்க் கட்டு.
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன் ; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.எல்லா பாகங்களும் அழகாக வெட்கப்படும்போது
உன் பார்வை மட்டும் என் உயிரைக் குடிக்கிறதே
உனக்குள் ஏனிந்த முரண்பாடு?
கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.நீ பார்க்கும்போது
எமனாய் மாறி என்னைக் கொல்கிறது!
நான் பார்க்கும்போது
மானாய் மாறி அங்குமிங்கும் ஓடுகிறது!
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளாத தருணங்களில் மட்டுமே
உன் கண்கள், கண்களாய் இருக்குமோ?
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து.
எமனோ? கண்ணோ? மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.புருவங்களே!
கொஞ்சம் இவள் கண்களை மறையுங்களேன்..
பார்த்தேக் கொல்கிறாளே!
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கணகள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.உன் துப்பட்டாவிற்குத் தெரியுமா?
அது கோயில்யானையின் முகபடாமை
விட பெருமை வாய்ந்ததென்று?
கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
மாதருடைய சாயாத மார்பின்மேல் அணிந்த ஆடை மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.உன் இருவிழிகளின் ஒளி தாங்காமல் தான்
நீ நிலம் நோக்கும் போதுமட்டும் உன்னைப் பார்க்கிறேன்!
ஆனால் உன் ஒற்றை நெற்றிப் பார்த்தே
என் இதயம் நொறுங்குகிறது!
ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு.
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!மற்ற பெண்களெல்லாம் கண்மை தீட்டினால்
நீ “இளமை” தீட்டி வருகிறாய் கண்ணுக்கு.
முகத்துக்கு மஞ்சள் பூசியும் அலுத்துவிட்டதா?
இப்படி வெட்கத்தைப் பூசிக் கொண்டு வருகிறாய்.
இதற்குமேலும் வேறென்ன வேண்டும் உன் முகத்துக்கு?
பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?கள்ளைப் பருகினால்தான்
போதை தலைக்கேறுமாம்.
கள்ளி! உன்னைப் பார்த்தாலே
போதை மனதுக்கேறுகிறதே!
உண்டார்க் ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை.
பொங்கலோப் பொங்கல்!
பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்.
உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.
வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது!
மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!
ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.
எனக்குள் நடக்கிறது
மயில் விரட்டு!
‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!
நொடிகளெங்கும் உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி வருகிறதென் இதயமுள்.
என் வாழ்க்கைக் கடிகாரமும்
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!
உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!
பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!
நான், நீயிலி*!
“ “
( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )
"பிறந்த நாள் வாழ்த்து!"
உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவோமா?நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான்
பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள். உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய் உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா? உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது,
நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் ‘பிறந்தநாள் ஆடை’? போல் வருமா? ;)ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கே பெயர் வைத்தார்களா?
அழகப்பன் என்று! உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வயதோடு, அழகையும்
ஏற்றிக் கொள்கிறாய்!உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது! உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாய். அழுகையோடு பிறந்தாயா?
அழகோடு பிறந்தாயா?“.....”
( உன் வயதுக்கு ஒரு கவிதை கேட்டாய். ஒன்றே ஒன்று குறைகிறதடி. சரி உன் பெயரெழுதி நிரப்பிக்கொள்!)
அழியாத அன்புடன், Praba
No comments:
Post a Comment