Saturday, February 17, 2007

இன்னொரு பிறவியிருந்தால்...

நான் மட்டுமே என்னிடம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் என்னோடு சேர்ந்து என்னிடம் பேச ஆரம்பித்தவள் நீ. என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு முழுவதுமாய் என்னிடம் நீயேப் பேசிக்கொண்டிருந்தாய். பின் என் இதயத்தின் நான்கு அறைகளின் எல்லாப் பக்க சுவர்களிலும் எப்போதும் உன் குரலே எதிரொலித்துக் கொண்டு இருக்கவும் செய்துவிட்டு எங்கோ மறைந்துவிட்டாய். இப்பொழுது நான் கூட என்னிடம் பேசுவதில்லை.

கோடைக்கு மட்டும் வந்து தங்கும் பறவையைப் போல வந்த வேகத்தில் மறைந்து விட்டாய். எல்லா காலமும் கோடையாகவே இருந்திருக்க கூடாதா என ஏங்குகிறது மனது. இரவானதும் புற்களில் வந்து படியும் பனித்துளிகளைப் போல என் இதயத்தில் உன் நினைவுகள் படிந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து கதிரவன் கேட்டால் திருப்பித்தானேக் கொடுக்க வேண்டும்? நானோ விடியவேக் கூடாதென வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று எனக்கே தெரியவைத்தவள் நீ! உண்மையைச் சொன்னால் இன்று வரை நானும் கவிதையெல்லாம் எழுதியதில்லை. ஆனால் உன்னை நினைத்து என்ன எழுதினாலும் கவிதையாகி விடுகிறது. என்னை கவிஞனாக்கிய நீயேதான் என்னை நடிகனாகவும் மாற்றினாய். நீ பிரிந்ததும் மரித்துப் போனவன், உயிரோடிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கவிதை வந்த அளவுக்கு நடிப்பு வரவில்லை. கவிஞனுக்கும் நடிகனுக்குமிடையே நடந்த போராட்டத்தில் கவிஞன் ஜெயிக்கிறான். ஆனால் காதல் தோற்கிறது!

மை தீர்ந்து போனபின்னும் உதறி உதறி எழுதப்படும் பேனாவின் உலர்ந்து போன நிப்பை போல கண்ணீரெல்லாம் வற்றிய பின்னும் கதறி கதறி அழுது வார்த்தையின்றி வறண்டு கிடக்கிறது இதயம். எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்கிற உந்துதலில் மொத்த வார்த்தைகளும் சண்டையிட்டு மடிந்து போக எதுவுமேப் பேசாமல் திரும்பியவன், இன்றோ எதையும் பேசிவிடக்கூடாதென்கிற கவலையில் வார்த்தைகளெல்லாம் சோர்ந்து போக மௌனமாய் அழுகிறேன். உன்னிடம் சொல்ல வந்து சொல்லாமல் விழுங்கிய துக்கம் தோய்ந்த வார்த்தைகளால் ரணமேறிக் கிடக்கிறது தொண்டை.

கண்ணில் நீ இருப்பதால், அழும்போது கண்ணீராய் ஓடிவிடுவாயோ என்ற பயத்தில் நீர் வராமல் அழப் பார்த்தேன். கண்ணுக்குள்ளும் வலி! அடக்கி வைத்தக் கண்ணீரெல்லாம் அறுத்துக் கொண்டு ஓட கன்னத்தில் உண்டானது ஒரு கண்ணீர்க் கால்வாய். உன்னைக் காதலித்த போது பறப்பது போல தான் இருந்தது. இப்போதோ கொஞ்சம் பலமாக காற்றடித்தாலும் உண்மையிலேயே பறந்து விடுகிறேன். என் உடையின் எடையை விட உடலின் எடை குறைந்து விட்டது. தண்ணீரில் விழுந்து, ஈரமான தன் இறக்கையை இழுப்பதற்கு முயற்சி செய்து, பின் இறக்கையையே இழந்துவிடுகிற ஈசலைப் போல உன்னிடம் இருந்து என்னை இழுக்க முயன்று என்னையே இழந்து கொண்டிருக்கிறேன் நான். இழந்தாலும் என்ன உன்னிடம் தானே இழக்கிறேன்.

என்னிடம் மட்டுமே நான் பேசிக்கொண்டிருந்த நாட்களில் உன்னிடமும் பேச வைத்தவள் நீ. என்னிடம் பேசுவதெல்லாம் மெதுவாக நின்று போக உன்னிடம் மட்டுமேப் பேசிக்கொண்டிருந்தேன் நான். என்னிடம் கணக்கு வழக்கில்லாமல் வார்த்தைகளைக் கடன் வாங்கிவிட்டு சிரிப்பு வட்டியை மட்டும் செலுத்திக்கொண்டிருந்தவள் அசலோடு போய்விட்டாய். இப்பொழுது என்னிடம் கூட நான் பேசுவதில்லை.

உன் பிரிவின் கொடுமை
ஒரு பிறவியிலேயேத் தாங்க முடியவில்லை!

இன்னொரு பிறவியிருக்குமென்றால்

என் காதலியாய் அல்ல…

எனக்கு மகளாய்ப் பிறந்து விடு!

கொசுறாக ஒரு பாடல் : என்ன படம் என்று தெரியவில்லை வரிகள் பிடித்திருந்ததால் இங்கே :

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…
நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…

அழியாத அன்புடன்,
Prabakaran

No comments: