பத்தாவது வரைக்கும் நன்றாகப் படித்துவிட்டு 12-வது வந்து உருப்படாமல் போனவர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த இரண்டு வருடத்துக்குள் “ஏதாவது ஒன்று” நடந்து அவர்களை அலைய விட்டிருக்கும். அப்படி 12-வது படிக்கும்போது எனக்கு நடந்த அந்த “ஏதாவது ஒன்று” தான் இது…
அது பதினொன்றாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு முடிந்து எல்லோரும் +2 க்கு ட்யூஷன் சேர ஆரம்பித்திருந்த நேரம்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்குப் படிக்க வேண்டுமே என்கிற அக்கறை ஒரு காரணமாக இருந்தாலும், ட்யூஷன் சேர்வதில் எல்லோரும் காட்டிய ஆர்வத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருந்தது. அதாவது 11-வது வரைக்கும் ஆண்கள் மட்டுமேப் படிக்கும் பள்ளியிலேயே படித்து(?) வளர்ந்தவர்களுக்கு ட்யூஷனிலாவது பெண்களைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது நியாயம்தானே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த மாஸ்டரிடம் பெண்கள் அதிகமாக ட்யூஷன் சேர்ந்தார்கள் என இதற்காக ஒரு சர்வே எடுத்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவன் மதன். அவனுடைய சர்வே முடிவுப்படி கெமிஸ்ட்ரிக்கு ஜோசப் சாரிடம் சேருவது என நாங்கள் எல்லோரும் ஏக மனதாக முடிவு செய்தோம்.
நாங்கள் என்றால் அதில் நான், மதன், செல்வா, வினோத், பாஸ்கர் ஆகிய பஞ்சப் பாண்டவர்களும் அடக்கம்.
அந்த வருடம் பொங்கல் அன்றைக்கு கெமிஸ்ட்ரி ட்யூஷனில் +2 வுக்கான முதல் க்ளாஸ் நடந்தது.
அப்போதே யார் யார் எந்த batch வரவேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தார் மாஸ்டர்.
அங்கு ட்யூஷன் நடக்கும் அறை ஒரே சமயத்தில் 30 பேர் மட்டுமே உட்காரக் கூடிய அளவில் சிறியதாக இருந்ததால் சில சமயம் இரண்டு, மூன்று பள்ளிகள் கலந்து வர வேன்டியிருக்கும். மாலை 5 மணி பேட்சில் எங்கள் பள்ளியின் 20 பேரையும் சாரதாப் (பெண்கள்!) பள்ளியின் 12 பேரையும் மாஸ்டர் வர சொன்னவுடன்,
எங்கள் பத்துக் கண்களிலும் 1000 வாட்ஸ் பவர்!.
“அப்பாடா…எங்கடா நம்மள அந்த TNPL convent கம்மனாட்டிகளோட சேத்துடுவாரோனு பயந்தேன்…மனுசன் நம்ம மனசறிஞ்சு batch பிரிச்சிருக்கான் டா…ஜோசப் வாழ்க” உற்சாகத்தில் மதன், மன்மதனாகிக் கொண்டிருந்தான்.
“நல்லவேளை தெரசா ஸ்கூல் புள்ளைகளோட சேர்த்திருந்தான்னா நம்ம கத கந்தல்டா…அவுளுக அலம்பலுக்கு நாம தாங்கமாட்டோம்…ஏதோ சாரதா ஸ்கூல் புள்ளைக நம்ம ரேஞ்சு… பார்ப்போம் ஏதாவது செட் ஆகுதான்னு” – சொல்லிக்கொண்டே அந்தப் பக்கம் நோட்டம் விட்டான் வினோத்.
“உனக்கு ஏண்டா எப்பவும் தெரசா ஸ்கூல் புள்ளைக மேல இவ்ளோ காண்டு..அவங்க என்னப் பண்ணாங்க உன்ன??” வினோத்தை வம்புக்கிழுத்தான் செல்வா.
“டேய் இங்கப் பாருங்கடா இவன் பேசறத “அவங்க”லாம்…எப்படா மரியாத கொடுத்துப் பேச ஆரம்பிச்ச?...மச்சி நீ எந்த ரூட்ல போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா…நீ நடத்து…” செல்வா தனது பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி பின்னாடி சுற்றுவதும் அவள் தெரசா ஸ்கூலில் படிக்கிறாள் என்றும் ஏற்கனவே எங்களிடம் சொல்லியிருக்கிறான் வினோத்.
“டேய் மச்சி தெரசா ஸ்கூல் co-ed. அந்தப் புள்ளைக எல்லாம் நம்மள மதிக்கக் கூட மாட்டாளுங்க…அவளுக வர்றதே மொபட்லதான்…உன்னோட சைக்கிளப் பாரு…அதுல பெல்லத் தவிர எல்லாமே சத்தம் போடும்…சாரதா ஸ்கூல்னா நம்மள மாதிரிக் கேசு..நமக்குத் தாவணியேப் போதும்டா..சுடிதாரெல்லாம் வேணாம்” – வினோத்.
சாரதா ஸ்கூலில் தாவணிதான் யூனிபார்ம். அதற்காகவே அந்த ஸ்கூல் வழியாகதான் நாங்கள் எங்கள் பள்ளிக்கு எப்போதும் போவோம்.
ஒருவழியாக எங்கள் சண்டையை முடித்துவிட்டு மாஸ்டரிடம் முதல் தவணை ட்யூஷன் ஃபீஸ் கொடுத்துவிட்டு எங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு விடைபெற்றோம்.
ட்யூஷன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மதனும், வினோத்தும் ஆளுக்கொருப் பெண்ணைப் பார்க்க(!) ஆரம்பித்திருந்தார்கள். பாஸ்கரும், செல்வாவும் படிப்பதற்காகவே அவதரித்த மாதிரி எப்போதும் பாடத்திலேயேக் குறியாய் இருந்தார்கள். நான் இரண்டிலும் சேராமல் ஏதோக் கடமைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
ட்யூஷன் ஆரம்பித்து ஒரு மாதம் கழிந்த பிறகுப் புதிதாய் இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.
அவள் ஸ்கூலைப் போலவே அவள் பெயரும் சாரதா. பெயரைச் சொல்லும்போது M.சாரதா என்று இனிஷியலோடு அவள் சேர்த்து சொன்னதும் நான்கு பேரும் என்னையேப் பார்த்தார்கள்.மதன் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி என் கையில் திணித்தான் “M.S – M.S” படித்ததும் கிழித்து அவன் கையிலேயேத் திணித்து விட்டேன்.
இன்றைக்குமுழுவதும் இவர்கள் நான்கு பேரும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் நான் அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றேத் தவிர்த்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் ஒருபக்கம் திரும்பி நோட்டை எடுத்த போது எதேச்சையாக அவள் முகத்தைப் பார்த்தேன். அவளை அழகி என்று சொல்லமுடியாது ஆனால் எந்தக் குறையுமில்லாத எளிமையான முகம். மாநிறம். நான்கு பேரும் என்னையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நான் பார்வையைத்திருப்பினேன்.கொஞ்ச நேரம்தான். ட்யூஷனில் தரையில்தான் உட்கார்ந்திருப்போம்.அவளுடைய ஜடை தரையில் ஒரு அரை அடிக்கு சுருண்டு கிடந்தது.எனக்கு அடுத்த துண்டு சீட்டு வந்தது “கூந்தல் நீளமா இருக்கா?” எனக்கு நீளமானக் கூந்தல் பிடிக்கும் என்று இவர்களிடம் உளறியது வம்பாகப் போனது.
ட்யூஷன் முடிந்து அவள் எழுந்தபோதுதான் கவனித்தேன். எல்லோரும் தாவணியில் ஒரு இடத்தில் மட்டும் “பின்” குத்தியிருக்க அவள் மட்டும் இரண்டு இடத்தில் குத்தியிருந்தாள்.
நான் நோட்டில் கிறுக்கினேன் :
“அவள் மனதை மூடிக்கொண்டு
என் மனதைத் திறந்து விட்டாள்”
நோட்டைப் பிடுங்கிய மதன் சிரித்துவிட்டுக் கத்தினான் “இங்கப் பாருங்கடா ஒரு கழுத , கவித எழுத ஆரம்பிச்சுடுச்சு”
(தொடரும்...)
பகுதி 2
அழியாத அன்புடன், Praba
Saturday, February 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment