Saturday, February 17, 2007

இன்னா செய்தாரை......

திருக்குறளில் எனக்குப் பிடித்தது :

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பள்ளியில் நான் புரிந்து கொண்ட பொருள் :

தமக்குத் தீமை செய்தவரை தண்டித்தல் - அவரே நாணும்படியாக அவருக்கு நன்மை செய்துவிடுவதாகும்.

இது மேலோட்டமாக புரிந்துகொள்ளப்பட்டது. பின்னர் எங்கோ நூலகத்தில் படித்தது :

பொதுவாக ஒருவருக்கு நாம் ஒரு நன்மையைச் செய்துவிட்டுப் பின்னர் ஒருமுறை அதைச் சொல்லிக்காட்டினாலும் அந்த நன்மையைச் செய்ததற்கான அர்த்தமேப் போய்விடும்.

அப்படியிருக்க நமக்குத் தீமை செய்த ஒருவருக்கு நன்மை செய்துவிட்டு அதையும் சொல்லிக் காட்டக்கூடாது.

அதனாலேயே வள்ளுவர்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்தல்.

என்று சொல்லாமல்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

என்று சொன்னார்.

இன்னா செய்தாரை - (தமக்குத்) தீமை செய்தவரை

ஒறுத்தல் - தண்டித்தல்

அவர்நாண - அவரே நாணும்படியாக

நன்னயஞ் செய்து - (அவருக்கு) நன்மை செய்து

விடல் - (பின்னர், தமக்கு அவர் செய்த தீமையையும், தாம் அவருக்கு செய்த நன்மையையும்) மறந்து விடுவதாகும்.

இந்தக் காலத்தில் தீமை செய்தவருக்கு நன்மை செய்தால், அதற்காக அவர் நாணுவார் என எதிர்பார்க்கலாமா?

சந்திப்போம்!

No comments: