Saturday, February 17, 2007

+2 காதல் - 4

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று

Chemistry tuition :

Chemistry tuition-இல் தான் எனக்குள்ளும் அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. நான் எப்போதும் அமரும் மூலைக்கு எதிர் பக்கமாய் என் பார்வையில் படுமாறுதான் அவள் உட்காருவாள். ட்யூஷன் நடந்துகொண்டிருக்கும்போதே அடிக்கடி அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்ப்பதும், ஜடையை அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தூக்கிப் போடுவதும் அவளுக்கு வழக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் என்னுடைய அதிகபட்ச எதிர்வினை நோட்டில் எதையாவதுக் கிறுக்கி வைப்பதுதான்.

ஒரு நாள் ட்யூஷன் தொடங்குவதற்கு முன் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கீழே சாலையை பார்த்தபடி நின்றிருந்தேன்.lady bird-இல் ஒரு lady bird – ஆக அவள் வந்து கொண்டிருந்தாள். சாலையில் வரும் அவள் மேலே நிற்கும் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் அவளையே மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மாஸ்டர் வீட்டுக்கு முன்னால் மிதிவண்டியை சாலையில் நிறுத்தியவள், என் மிதிவண்டிக்கு அருகில் இருந்த மிதிவண்டியை தள்ளி நிறுத்திவிட்டு அவளுடையதைக் கொண்டுவந்து என்னுடையதை ஒட்டி நிறுத்தினாள்.என் பாதங்கள் தரையை விட்டுக் கொஞ்சமாய் மேல் எழும்புவதைப் போல் இருந்தன.வண்டியில் இருந்து பையை எடுத்தவள் சடாரென மேலேப் பார்த்தாள். எனக்கு இதயமே வெடித்துவிடுவது போல் இருந்தது.உடனேத் திரும்பிக் கொண்டேன்.நான் பார்த்துக்கொடிருந்ததை அவள் பார்த்திருப்பாளோ என்றே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.அன்று ட்யூஷன் முடியும் வரை நான் அவளை நேராய்ப் பார்க்க வில்லை.அவளும் எதுவும் பேசவில்லை.

அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் அவளோடு மெல்லப் பேச ஆரம்பித்திருந்தேன். என்னோடு இருக்கும் நேரங்களில் என் நண்பர்களோடும் பேசுவாள். அதன் பிறகு என் நண்பர்களுக்கு அவள் மேல் ஒரு மரியாதையே வந்திருந்தது. நான் இல்லாத சமயங்களில் என்னைப் பற்றி அவளிடம் அதிகமாகவே அளந்துவிட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் என்னிடம் வந்தவள், “நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா?” என்று கேட்டாள்.”ஏதோ எழுதுவேன்,,ஆனா அத கவிதைன்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்றேன். “நாங்கூட நல்லா வரைவேன்…ஆனா அத ஓவியம்னெல்லாம் சொல்லிக்க முடியாது” என்று சொல்லி சிரித்தாள். அதன்பிறகு ட்யூஷனுக்கு நேரத்திலேயே வந்துவிட்டால் போர்டில் அவள் எதையாவது வரைய பக்கத்தில் நானும் எதையாவது கிறுக்க, ட்யூஷன் ஆரம்பிக்கும் வரை மனம் சந்தோசத்தில் திளைத்திருக்கும்.

நான் ட்யூஷனுக்கு நோட் எடுத்து செல்வது, எதையாவது கிறுக்கவும், வரையவும் தான். பாடம் சம்பந்தமான நோட்ஸ் எல்லாமே புத்த்கத்திலேயே அங்கங்கே சின்ன சின்னதாய் எழுதிவிடுவேன். என்னுடையப் புத்தகத்தில் அச்சில் இருப்பதை விட நான் எழுதியிருப்பது அதிகமாக இருக்கும். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, அவளும் இனிப் புத்தகத்திலேயே எழுதப் போவதாகவும், இதுவரை நான் எழுதியதைப் பார்த்து எழுதிக்கொள்ள என் புத்தகம் வேண்டும் என்று வாங்கிசென்றாள். போகும்போது அங்கங்கே கிழிந்து தொங்கியபடி போன என் புத்தகம் திரும்பி வரும்போது கிழிந்த இடமெல்லாம் ஒட்டப்பட்டு, வெளியிலும் அட்டைப் போட்டு அழகாய் வந்து சேர்ந்தது. நோட்டில் கிறுக்கினேன் :

“கிழிந்த புத்தகத்தை ஒட்டித் தந்தாள்
நன்றாக இருந்த இதயத்தைக் கிழித்துவிட்டாள்”
(நான் இப்ப எழுதுறக் கவிதை(?)யேக் கேவலமா இருக்கும்போது, இது அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி எழுதினது, ரொம்பக் கேவலமாதான் இருக்கும்..பொறுத்துக்குங்க!)

அதற்குப் பிறகு ட்யூஷன் நேரத்தில் அவள் என்னைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தாள். காரணம், நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அவள் என்னைப் பார்க்காத நேரங்களில் நானும் நோட்டில் அவளை வரைய ஆரம்பித்தேன், அதற்குப் பிறகுதான் தெரிந்தது எனக்கும் ஓரளவுக்கு வரைய வரும் என்று. நான் வரைவது அழகாக இருப்பதாக சொல்லி என்னைப் பாராட்டினார்கள் என் நண்பர்கள். அழகாக வரைவது எல்லாம் வரைபவன் கையில் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அது யாரைப் பார்த்து வரைகிறோம் என்பதைப் பொறுத்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவள் அழகுக் கூடிக்கொண்டே இருந்தது. அவள் குரலும் நாளுக்கு நாள் இனிமையாகிக் கொண்டே வந்தது.நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று எனக்கு மெதுவாய் புரிந்தது. வியாழன், வெள்ளி இரு நாளும் பள்ளி முடிந்து தாவணியில் வரும் பெண்கள், சனிக்கிழமை மட்டும் சுடிதாரில் வருவார்கள். அன்று சனிக்கிழமை. வழக்கம்போல் அவள் வரும் சாலையில் கண்ணை வைத்துக் காத்திருந்தேன்.அழகாய் ஒரு கத்திரிப்பூ நிற சுடிதாரில் துப்பட்டா சிறகாய்ப் பறக்க ஒரு தேவதையைப் போல் வந்திருந்தாள்.

“என்ன மச்சி உன் ஆளு..தாவணியிலயும் அழகா இருக்கு..சுடிதார் போட்டாலும் பொருந்துது?” – மதன்.
மனம் அமைதியாய் இருந்தாலும் உதடு சொன்னது : “ இந்த சுடிதார் உண்மையிலேயே அவளுக்கு அழகா இருக்கில்ல?”
எல்லோரும் அமைதியாய் இருந்தபோதுதான் உணர்ந்தேன் நான் கொஞ்சம் அதிகப்படியாய்ப் பேசி விட்டதை.

ஆனால் அதன் பிறகு எல்லா சனிக்கிழமையும் அவள் அதே சுடிதாரில் வர ஆரம்பித்தாள். இந்த நான்கு பேரில் எவனோ சொல்லியிருக்க வேண்டும்.
“என்ன சாரதா..சனிக்கிழமைக்குன்னும் ஒரு யூனிஃபார்ம் வச்சிருக்க போலிருக்கு” – எனக்கும் கேட்குமாறு ஒரு நாள் சாரதாவிடம் கேட்டுவிட்டான் மதன்.
என்னைப் பார்த்துக் கொண்டே “நல்லாயிருக்குன்னு சில பேர் சொன்னாங்க… அதான்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
வழக்கம்போல கிறுக்க ஆரம்பித்தேன் :

அவள் மடியில் விழுந்த என் மனசு!

“நிலவைக் கிட்டேப் பார்க்க அவள் முகத்தருகே என் மனசுப் போக…
அவள் பார்வை மின்னல் தாக்கியதில் கண்களை அதுவும் மூடிக்கொள்ள…
அவள் கன்னக் குழியோத் தடுக்கி விட…
அந்தக் கூந்தல் அருவியில் என் மனசுத் தடுமாறி விழ…
விழுந்து சரிகையில் ஒரு கொடியை அதுவும் பற்றிக் கொள்ள…
அது அவள் இடையெனத் தெரிந்து பற்றியதையும் விட…
அங்கிருந்தும் விழுந்த என் மனசைத் தாமரைப் பூவைப் போலத் தாங்கிக்கொண்டது அவள் மடி!”

அரையாண்டுத் தேர்வுக்கு முன்பே ட்யூஷனில் எல்லாப் பாடமும் முடித்து விட்டிருந்தார் மாஸ்டர். நான் புத்தகத்தில் இருக்கும் எல்லா வேதிச்சமன்பாடுகளையும் (chemical equations) ஒரு நாள் தேர்வாக எழுதுவதாக சொல்லி அதை மொத்தமாக எழுதியும் காண்பித்தேன். பாராட்டிய மாஸ்டர் ,”very good..equations மட்டும் சரியா எழுதிட்டீங்கன்னாப் போதும்..மத்ததெல்லாம் அவ்வளவாப் படிச்சு பார்க்க மாட்டாங்க..ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணலாம்…சரி நீ examக்கு முன்னாடி ஒரு தடவ வந்து இதே மாதிரி எழுதிட்டுப் போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் எல்லோரிடமும் இதை அவர் சொல்ல, என்னிடம் வந்தாள் அவள். “ஒன்னு விடாம எல்லா equationனும் எழுதினியா? அந்தப் பேப்பர் கொஞ்சம் கொடேன்” என்று கேட்க, நான் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவள்,”எல்லா equationனையும் ஒரே சமயத்துல refer பண்ண ஈசியா இருக்கும், இதத் தர்றியா நான் ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தர்றேன்” என்றாள். நானும் சரியென்றேன்.ஜெராக்ஸ் எடுத்து வந்தவள் ஜெராக்ஸ் காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு நான் எழுதியதை அவள் எடுத்துப் போய் விட்டாள். அந்த பேப்பரில் நான் என்னுடைய பெயரை எழுதியிருந்தது ஜெராக்ஸ் காப்பியிலும் வந்திருந்தது, ஆனால் என் பெயருக்கு முன்னால் அவள் பெயர் பேனாவால் எழுதப் பட்டிருந்தது!

அதற்குப்பிறகு ட்யூஷனில் பாடம் என்று எதுவும் நடக்காது. எப்போது வேண்டுமானாலும் போய் இருக்கும் ஏதாவது ஒரு வினாத்தாளை எடுத்துத் தேர்வெழுதலாம். நான் கொஞ்ச நாளாக அதில் ஆர்வம் காட்டாமல் ட்யூஷனுக்குப் போகாமல் இருந்தேன். தினமும் காலையில் maths ட்யூஷனிலும், மூன்று நாட்கள் மாலையில் physics ட்யூஷனிலும் அவளைப் பார்த்தாலும் , மீதி மூன்று நாளும் மாலையில் அவளைப் பார்க்கால் இருப்பது எதையோ இழந்ததைப் போல இருந்தது. பிறகு நானும் chemistry தேர்வு எழுதப் போக ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் தேர்வெழுதினால் ஒரு மணி நேரம் அவளோடுப் பேசிக்கொண்டிருப்பேன். அவள் வராத நாட்களில் தேர்வெழுதாமல் திரும்பியதும் உண்டு. வெளியில் சந்திக்கும்போதும் பேசிக்கொள்வது வழக்கமானது. என்னுடைய எல்லாப் பயணங்களும் அவள் வீட்டு சாலையைத் தொட்டேப் போயின.இப்படிப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் chemistry tuition மாடியில் வைத்து என்னிடம் அதைக் கொடுத்தாள். நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டக் காதல் கடிதம். நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என்னை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படித்து முடித்து நான் நல்ல நிலைமைக்கு வருவேன் என்று நம்புவதாகவும், என்னுடைய ரசனையும், அவளுடையதும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதியிருந்தாள் ஆங்கிலமும், தமிழும் கலந்து. எனக்குப் படிக்கப் படிக்க திக் திக்கென்று மனம் அடித்துக் கொண்டிருந்தது. படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

(தொடரும்...)

அடுத்தப் பகுதி


அழியாத அன்புடன், Praba

No comments: