Saturday, February 17, 2007

அழுகையோடு ஆரம்பமானது முதலிர

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 3

முதல் பகுதி

“ஒரு ரெண்டு நிமிசம் நான் சொல்றத முழுசாக் கேட்டீங்கன்னா சந்தோசப்படுவேன்…எம்ப்பேர் அருள். நான் காலேஜ்ல இளவரசியோட கிளாஸ்மேட். இப்போ இளவரசிக்கு நீங்க மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு தான் உங்களப் பார்க்க வந்திருக்கேன். உங்களுக்கு மருமகனா வர்றதுக்கு நீங்க என்னத் தகுதிகள் எதிர்பார்க்கறீங்கனு எனக்குத் தெரியாது, நான் என்னோடத் தகுதிய சொல்லிட்றேன். இப்போ நான் சென்னைல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ப்ராஜெக்ட் லீடரா வொர்க் பண்றேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன். எனக்கு எப்பவுமே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லனு சொல்ல முடியாது. காலேஜ்ல ஸ்மோக், ட்ரிங்க்ஸ் பண்ணதுண்டு, ஆனா அதெல்லாம் நிறுத்தி இப்போ 5 வருஷம் ஆச்சு. இது நான் போன வருஷம் ஹெல்த் செக்கப் பண்ணிக்கிட்ட ரிப்போர்ட். அப்புறம் எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல, இருந்தாலும் உங்க திருப்திக்காக இந்தாங்க என்னோட ஜாதகம். இளவரசிக்கூட 7 வருஷமாப் பழகினதுல எனக்கு அவளோட பாஸிட்டிவ், நெகட்டிவ்னு அவளப் பத்தி முழுசாத் தெரியும். நான் இவ்வளோப் பேசறதுனால நானும், உங்கப் பொண்ணும் லவ் பண்றோம்னு நெனச்சிடாதீங்க. இதுவரைக்கும் இளவரசிக்கிட்ட இதப் பத்தி நான் பேசினதில்ல. உங்க அனுமதி இல்லாம அவகிட்ட நான் இதப் பத்திப் பேசறதும் நல்லா இருக்காதுனு நெனைக்கிறேன். இதுல என்னப் பத்தி, என்னோடக் குடும்பத்துல இருக்கவங்களப் பத்தி முழுசா எழுதியிருக்கேன்…படிச்சுப் பாருங்க… கிழிக்கிறதா இருந்தாலும் பரவால்ல, ஒரே ஒரு தடவப் படிச்சுட்டு அப்புறமா கிழிங்க….அதுலையே என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்சோட போன் நம்பர்ஸ் கூட இருக்கு, என்னப் பத்தி முழுசாத் தெரிஞ்சவங்க இவங்க. என்னப் பத்தி விசாரிக்கனும்னா இவங்ககிட்ட நீங்கப் பேசலாம். நீங்க என்ன ஜாதினு எனக்குத் தெரியாதுங்க, அதனால நான் உங்க ஜாதிதானான்னும் எனக்குத் தெரியாது. உங்க statusசுக்கும் நான் சமம்னு சொல்ல முடியாது. ஆனா அவளோட கேரக்டருக்கு நான் பொருத்தமானவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால, உங்களோட statusக்கு ஏத்த மாதிரி உங்க ஜாதியில மாப்பிள்ள பார்க்கிறதுதான் உங்களோட விருப்பம்னா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையப் பத்தி முடிவெடுக்கறதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. நான் என்னோட விருப்பத்த மட்டும் தான் சொல்லியிருக்கேன், முடிவு உங்களோடதாவே இருக்கட்டும். ஒருவேளை நீங்க என்ன நிராகரிச்சா, நான் வந்துப் பேசின விஷயம் எதுவும் இளவரசிக்குத் தெரிய வேண்டாம்!”

சொல்லவந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரிடம் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தைக் கொடுத்தான். ஒரு மாதிரியாக அவனைப் பார்த்துவிட்டுக் கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன், அவரும் படித்து விட்டு அமைதியாகவே இருக்கவும் அவரைப் பார்த்துப் பேசினான்.

“சார் நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்க விரும்பல, ஆனா எங்கம்மாகிட்ட எங்கப்பா எப்படி நடந்துக்கனும்னு நான் விரும்பறனோ, அப்படிதான் என்னோட மனைவிகிட்ட நானும் நடந்துக்குவேன். இதுக்கப்புறமும் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல. நாங்க வர்றோம் சார்”

சொல்லிவிட்டு கேட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“தம்பி ஒரு நிமிஷம்…”

திரும்பிப் பார்த்தார்கள்.

“வீட்டுக்குள்ள வாங்க…” புன்னகையோடு சொன்னார்.

எதையோ எதிர்பார்த்து வந்த வினோத் ஒன்றும்புரியாமல் அவனோடு உள்ளே சென்றான். இளவரசியின் அப்பா, அம்மாவோடு பேசி விட்டு “அடுத்த வாரம் அப்பாகிட்டப் பேசிட்டு உங்ககிட்ட பேச சொல்றேங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது காற்றில் மிதப்பவனை போல இருந்தான் அருள்.விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று இரவு இருவரும் சென்னை திரும்ப ரயிலேறினார்கள். அதுவரைக்கும் எதுவுமேக் கேட்காமல் இருந்த வினோத் வாயைத் திறந்தான்.

“மச்சி ஏண்டா அவர்ட்ட நீங்கக் காதலிச்ச விசயத்த சொல்லவேயில்ல?”

“டேய் எந்த அப்பன்கிட்டப் போய் நான் உங்கப் பொண்ணக் காதலிக்கிறேன்னு சொன்னாலும் அது அவங்களுக்கு நம்ம மேல கோபத்ததான் வரவழைக்கும்… இல்ல உங்கப் பொண்ணும்தான் என்னக் காதலிச்சான்னு சொன்னாலும் கோபம் அப்படியே பொண்ணு மேலத் திரும்பிடும்… என்னமோ உலகத்துலப் பண்ணக்கூடாத பெரியத் தப்ப தான் பொண்ணு பண்ணிட்ட மாதிரி… அதான் சொல்லல”

“சரி அந்த லெட்டர்ல அப்படி என்னதான் எழுதியிருந்த?”

“ம்ம்ம்… I am suffering from love. Please grant me your daughter னு எழுதியிருந்தேன்”

“மச்சி நக்கல் பண்ணாதடா… அதுல ஒரு காப்பி கொடுத்தா நமக்கும் பின்னாடி உதவியா இருக்கும்ல?”

“டேய் கடுப்பக் கிளப்பாத… இந்நேரம் இளவரசிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கனும்… நான் அவ கால் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“அவங்கப்பா கிட்டயே அவ நம்பர வாங்கியிருக்கலாம்ல”

“போடாங்க… 7 வருச ஃப்ரெண்டுனு சொல்லிட்டு… மொபைல் நம்பர அவர்கிட்டயேக் கேட்க சொல்றியா?”

“சாரி”

ரொம்ப நேரம் படியிலேயே அமர்ந்திருந்தவன், கடைசி வரை அவளிடமிருந்து கால் எதுவும் வராததால், வந்து படுத்துக் கொன்டான், செல்போனைக் கையில் பிடித்தபடியே.

அடுத்த இரண்டு நாட்களும் அவளிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோனான். தன்னுடைய வீட்டில் இந்த விசயத்தை எப்படிக் கொண்டுபோவது என்பதும் பெரும் கவலையாகவே இருக்க, இரண்டு நாள் வேலை பார்த்தவன், மூன்றாம் நாளே ஊருக்குக் கிளம்பினான். அப்பாவிடம் நேரடியாக இதை எப்படி சொல்வதெனத் தெரியாமல் துணைக்கு அக்காவையும் அழைத்துக் கொண்டான். அப்பா வேலைக்கு போன பின், அக்கா மூலமாக, அம்மாவுக்கு விசயத்தை முதலில் சொல்ல அம்மா குதித்த குதியில் இருவரும் ஆடிப்போனார்கள். அவன் அம்மாவுக்கு எவ்வளவு வேகமாக கோபம் வந்ததோ, இரண்டு பேரும் பேசப் பேச அவ்வளவு வேகத்திலேயேக் குறைந்தது.

“நான்லாம் உங்கப்பாகிட்டப் பேச மாட்டேண்டா… நீயாச்சு உங்கப்பாவாச்சு” என்று சொன்னவள், “எல்லாம் பெரிய மனுசனாயிட்டாங்க நாம சொல்றத இனிமே எங்க கேட்கப் போகுதுங்க” என்று முனக ஆரம்பித்தாள்.

“ம்மா… அந்தப் பொண்ணும் உன்ன மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணுதாம்மா” – என்கிற ரீதியில் ஐஸ் வைக்க ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட அம்மாவை சமாளித்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் அப்பாவை நினைத்தாலே பயமாக இருந்தது.

அவன் எப்போதுமே அம்மா செல்லம் தான். அப்பாவிடம் அளவுக்கு அதிகமாகப் பேசுவதில்லை.

அக்காவிடம் சொன்னான், ”க்கா… அப்பாகிட்ட நீதான் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கனும்…”

“அப்பாகிட்ட விஷயத்தக் கொண்டு போறது வரைக்கும்தான் என்னோட வேல… அதுக்கப்புறம் அவர சம்மதிக்க வைக்கிறது உங்கைல தான் இருக்கு”

இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தப் பிறகு, அவன் அக்கா மெதுவாக அப்பாவிடம் விசயத்தைச் சொல்ல… கேட்டு முடித்தவர் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். அவன் தரையைப் பார்த்தான். அவராக எதுவும் கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தான்.

“கொஞ்சம் தண்ணிக் கொடும்மா”

“நம்மத் தலைல தெளிச்சு வெளிய அனுப்பிடுவாரோ” என்று பயத்தோடே இருந்தான்.

தண்ணீரை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்தார்.

அக்கா அவளைப் பார்த்து “எதாவது பேசுடா” என்ற அர்த்தத்தில் முறைத்தாள்.

“அந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நான் சொல்லல… கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும்” நிமிராமல் பேசினான்.

“எங்களுக்குப் பிடிக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?” - அவன் அப்பா.

“உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே எனக்கு ஒருப் பொண்ணப் பார்த்தாலும், எனக்கும் அந்தப் பொண்ணப் பிடிக்கும்னு நீங்களே முடிவுபண்ணிதானப் பாப்பீங்க” – சத்தமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமிருந்து சத்தம் அதிகம் வரவில்லை.

“நாங்க ஒரு பொண்ணுப் பார்த்து அது உனக்கு பிடிக்கலன்னா… கண்டிப்பா வேற பொண்ணதான் பாப்போம்… ஒரேப் பொண்ணக்காட்டி இவளதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லமாட்டேன்”

“நீங்க வந்து அந்த பொண்ணப் பாருங்க…அவங்க அப்பாகிட்டப் பேசுங்க… உங்களுக்குப் பிடிக்கலன்னா அதுக்கப்புறம் நான் எதுவும் சொல்லல”

“ப்பா… அந்தப் பொண்ண எனக்கு நல்லாத் தெரியும்ப்பா… என்னோடக் கல்யாணத்துக்கு வந்திருக்கு… நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லாதான் பேசினா… ஒரு தடவ நீங்கப் போய்ப் பார்த்துட்டு வர்றதுல என்ன இருக்கு” – அவன் அக்காவும் துணைக்கு வந்தாள்.

ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் இருந்தவர் , சொன்னார், “சரி இந்த ஞாயித்துக் கிழமை வர்றோம்னு அவங்க கிட்ட சொல்லிடு… பொண்ணு ஃபோட்டோ இருக்கா?”

“நான் என்ன அவள லவ்வாப் பண்றேன் போட்டோ வச்சிக்கிறதுக்கு… அக்கா கல்யாண ஆல்பத்துல இருப்பான்னு நெனைக்கிறேன்” - தான் அவளைக் காதலிக்கவில்லை என்று நம்பவைக்க பொய் சொன்னான்.

எப்படியோ தன்னுடைய வீட்டிலும் பாதி சம்மதிக்க வைத்துவிட்டதில் சந்தோசமாய் இருந்தாலும் இளவரசியிடம் இன்னும் பேசாமலே இருப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது. சென்னை திரும்பிய பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்று எங்கு போனாலும் செல்லைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தான். அன்று மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் செல் அலறியது.

( நிறைவுப் பகுதி )

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - நிறைவுப் பகுதி

( முதல் பகுதி )

“ஹலோ, நான் வினோத் பேசறண்டா”

“ம்ம்ம்… சொல்றா, உயிரோடதான் இருக்கியா?” சலிப்பு + கோபத்துடன் கேட்டான் அருள்.

“மச்சி போனவாரம் வந்தவுடனே ஆஃபிஸ்ல கொல்கத்தா அனுப்பிட்டானுங்கடா இன்னைக்குதான் வர்றேன்.. சாரிடா போறதுக்கு முன்னாடி கால் பண்ண முடியல”

“சரி சரி ஈவினிங் ஃப்ரியா இருந்தா வீட்டுப் பக்கம் வா”

“வர்றேன் வர்றேன்… இளவரசிகிட்ட இருந்து எதுவும் கால் வந்துச்சா? என்ன சொன்னா? எப்படி ஃபீல் பண்ணா”

“காலும் வரல.. கையும் வரல… நீ ஈவ்னிங் வா நேர்லப் பேசிக்கலாம்”

வினோத்துக்குக் கொஞ்சம் குழப்பமாயிருந்தது.

அன்று மாலையே வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அருள் வீட்டுக்கு வந்தான்.

மாடியில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.

“டேய் என்னடா தனியா மொட்டமாடியில உட்காந்திருக்க?”

தன்னுடைய வீட்டில் விசயத்தைச் சொல்லி பாதி சம்மதம் வாங்கியது, இளவரசி இன்னும் அவனிடம் பேசாதது எல்லாம் சொல்லி முடித்தான்.

“அவ கிட்டப் பேசனும் போல இருக்குடா”

“அதான் இந்த வாரம் நேர்ல சந்திக்கப் போறீங்கல்ல.. அப்போ நேர்லையேப் பேசிக்க வேண்டியதுதான?”

“நேர்லப் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவையாவதுப் பேசலாம்னு பாத்தேன் ”

“சரி இரு நம்ம ஜூனியர் பசங்க மூலமா ட்ரை பண்ணிப் பாக்கறேன்”

கல்லூரி ஜூனியர் ஒருவனை அழைத்து அவன் மூலம் இன்னொரு பெண் நம்பர் வாங்கி, அவளிடம் ஒரு பொய்யை சொல்லி இளவரசி நம்பரை வாங்கிக் கொண்டான்.

“ஜாப் விஷயமா.. அப்டி இப்டி னு சொல்லி அவ நம்பர் வாங்கியாச்சு… ந்தா ட்ரை பண்ணு”

“மச்சி… நீயே மொதல்லப் பேசுடா… அவங்கப்பா விசயத்த அவகிட்ட சொல்லிட்டாரா இல்லையான்னு தெரியல… நான் பேசினா உடனே கட் பண்ணிட்டான்னா?”

“சரி இரு நானேக் கால் பண்றேன்”

“ஹலோ இளவரசி… நான் வினோத் பேசறேன்”

“வினோத்?”

“சுத்தமா மறந்தாச்சா? ‘மாடு’ வினோத் பேசறேன்… இப்பவாது ஞாபகம் இருக்கா?” .கல்லூரியில் அவன் செல்லப் பெயர் ‘மாடு’.

“ஹே சாரிப்பா… நீ எப்படியிருக்க? இப்போ எங்க இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்.. இப்போ சென்னைல இருக்கேன்… சரி ஒரு நிமிசம், அருள் பக்கத்துல தான் இருக்கான்.. உங்கிட்டப் பேசனுமாம்… இரு கொடுக்கறேன்” அவள் இயல்பாகவே பேசுவதைக் கேட்டு விட்டு செல்லை அருளிடம் கொடுத்தான்.

செல்லை வாங்கியவன் அவள் பேசட்டுமென்று செல்லைக் காதில் வைத்து அமைதியாகவே இருந்தான்.

அந்தப் பக்கம் இன்னும் அமைதியாகவே இருக்கவும், அவனே “ஹலோ…” என்றான்.

பதில் எதுவும் இல்லை. மறுபடி மறுபடி ஹலோ… ஹலோ… என்று சொல்லிப் பார்த்தும் பயனில்லை.இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

“கால கட் பண்ணிட்டாடா”

“சரி போன்ல எதுக்குப் பேசிக்கிட்டு? எல்லாத்தையும் நேர்ல பாக்கும்போது பேசிக்க… ஓக்கேவா? சரி நான் கிளம்பறேன்… எதுவா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுடா”

“ம்ம்.. போயிட்டு வந்து கூப்பிட்றேன்”

தானே அழைத்தும் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவனுக்கு வேதனையாக இருந்தது. அன்றிரவு முழுவதும் எதை எதையோ நினைத்துக்கொண்டேப் படுத்திருந்தவன் விடிந்ததும் தூங்கிப் போனான். நேரில் பார்ப்பதற்குமுன் ஒருமுறையாவதுப் பேசிவிட வேண்டுமென்று நினைத்து அவள் செல்லுக்கு அழைக்கும்போதெல்லாம் முதல் முறை யாருமே எடுப்பதில்லை. அடுத்தமுறை அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும்.

அவள் தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்ற கவலையை விட ஏன் கோபமாய் இருக்கிறாள் என்றக் குழப்பமே அவனை அதிகமாக வாட்டியது.

அடுத்த வாரம் இரு குடும்பமும் சந்தித்த போது, அவனுடைய அப்பாவும் அவளுடைய அப்பாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற விசயம் தெரிய வர, நண்பர்களே சம்பந்திகளாவதில் இருவருக்குமே மகிழ்ச்சிதான். இரண்டு குடும்பத்திலும் எல்லோருக்குமேப் பிடித்துப் போக அப்பொழுதே அடுத்த மாதத்தில் திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. பெண் பார்க்க வருவதற்கு மட்டும் ஒத்துக் கொண்ட அப்பா, கடைசியில் திருமணத்தையே முடிவு செய்தது அவனுக்கு ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் இளவரசி வீட்டில் இருந்த அன்று முழுவதும் இளவரசியிடம் தனியாகப் பேச எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவளுடைய அப்பாவிடம் தான் பேசியபோது அவர்கள் காதலித்ததை அவன் சொல்லவே இல்லை என்பதும், அவர்கள் நண்பர்களாக தான் பழகினார்கள் என்று சொன்னதும் அவளுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்றவர்களும் “அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நாம சம்மதம் சொல்லிட்றதுதான் மரியாதை” என்ற ரீதியில் பொதுவாகவேப் பேசிக்கொண்டிருக்க அவனால் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு பேர் வீட்டிலுமே அவனால் இதைக் கேட்க முடியாத நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்ச்சி இருப்பதை மட்டும் அவனால் கவனிக்க முடிந்தது. அது சோகமா தன் மேல் இருக்கும் கோபமா எனத் தெரிந்து கொள்ள முடியாமலேயே சென்னைக்குத் திரும்பி விட்டான்.

மெரீனாக் கடற்கரை.

“மச்சி உனக்கு எங்கேயோ மச்சமிருக்குடா… எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா முடிச்சிட்ட… அடுத்த மாசம் குடும்பஸ்தனாகப் போற…” சிரித்துக் கொண்டே சொன்னான் வினோத்.

“டேய் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்குடா… நாந்தான் அவங்கப்பாகிட்டப் போய் அப்படியெல்லாம் பேசினேனா? எங்கப்பா கிட்ட எந்த விஷயமும் ஓப்பனா நான் பேசினதேயில்ல… எந்த தைரியத்துல அவர்ட்ட பேசினேன்னும் தெரியல… இளாவ விட்டுப் பிரிஞ்சிடுவேனோன்ற பயமே எனக்கு தைரியமா மாறிடுச்சுனு நெனைக்கிறேன்”

“அதான் எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏண்டா பழையக் கதையெல்லாம்?”

“இல்லடா… யாரால எல்லாம் காதலுக்குப் பிரச்சினை வரும்னு நெனச்சனோ அவங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டாங்க… ஆனாக் காதலிக்கிறப் பொண்ணே இப்பக் கண்டுக்கலன்னா… கஷ்டமாருக்குடா”

“மச்சி நீ ஃபீல் பண்ணாத… நான் அவ ஃப்ரெண்டுகிட்டப் பேசி அவ மனசுல என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்குறேன்…நீ கல்யாண வேலைய மட்டும் பாரு… எல்லாம் நல்லபடியா முடியும்”

அருளுக்கு,அவன் பேசுவதுக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது.

அந்த ஒரு மாத இடைவெளியிலும் கூட அவன் இளவரசியோடு எதுவும் பேசமுடியவில்லை. வீட்டிலிருப்பவர்களிடமும் அதை சொல்ல முடியாத நிலை. அந்த விசயம் மற்றவர்களுக்குத் தெரியாமலும் சமளித்துக் கொண்டான். திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றிலுமே அவனை சந்திக்காமல் தப்பித்துக் கொள்ளவேப் பார்த்தாள். சந்திக்க வேண்டிய நிலையிலும் கூட நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதை அவள் தவிர்ப்பது அவனுக்குப் புரிந்தது. திருமணம் முடிந்தபிறகு தன்னிடமிருந்த அவள் தப்பிக்க முடியாது என்றெண்ணியவன், எந்தக் கோபமாக இருந்தாலும் திருமணம் முடிந்தபிறகு அவளிடம் கேட்டு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான்.திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு. திருமண மண்டபத்தில், மணமகன் அறையில் நண்பர்கள் எல்லோரும்போன பிறகுத் தனிமையில் இருந்தவன் தன்னுடையப் சூட்கேஸில் தேடி, அதையெடுத்தான்.

அவனுக்கு அவள் எழுதியக் கடைசிக் கடிதம். மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தான். கண் லேசாகக் கலங்கியது.

“எப்படி இளவரசி உன்னால இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சாதாரணமா சொல்ல முடிஞ்சது? காதலிக்கிறப்ப பேசின வார்த்தையெல்லாம் ஆயுசுக்கும் மறக்காதே? அப்போ செஞ்ச சத்தியமெல்லாம் காத்தோடப் போகட்டும்னு விட்டிருந்தியா? எவ்வளவு கனவு கண்டோம்… எல்லாத்தையும் கனவாவே நெனச்சுக்கலாம்னு விட்டுட்டியா? எப்படி இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுத உனக்கு மனசு வந்தது?” அவளிடம் கேட்பதாக நினைத்துக் கொண்டு கடிதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மடித்து வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி மறுபடி மனசுக்குள் பேச ஆரம்பித்தான்.

“இளவரசி, இப்ப உனக்கு எம்மேல என்னக் கோபம்னு எனக்குத்தெரியல… உங்க அப்பாவே சம்மதம் சொன்ன பின்னாடி நீ ரொம்ப சந்தோசப்படுவன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்… ஆனா இப்பவரைக்கும் நீ எங்கிட்டப் பேசாம இருக்கிறது ஏன்னே எனக்குப் புரியல… உன்கிட்ட சொல்லாமலயே உங்கப்பாகிட்ட வந்து பேசிட்டேன்னுக் கோபமா? நாமக் காதலிச்ச விசயமே அவருக்குத் தெரியாதே… அது உனக்கு தெரியுமா தெரியாதான்னும் என்னால தெரிஞ்சிக்க முடியல… ஒரு தடவையாது எங்கிட்டப் பேசியிருந்தீன்னா எல்லாத்தையும் சொல்லியிருப்பேன்…மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சுட்டு இன்னொருத்தரோட வாழ என்னால முடியாதும்மா… அதனாலதான் உங்கிட்ட சொல்லாமலேயே உங்கப்பாகிட்ட நேர்ல வந்து பேசிட்டேன்… என்ன மன்னிச்சுடு! நாமக் காதலிச்ச விசயத்த உங்கப்பாவுக்குத் தெரிய வச்சு, உம்மேல அவருக்கு இருந்த நம்பிக்கைய இல்லாமப் பண்ணிட்டனோன்னு என்னத் தப்பா நெனச்சிக்கிட்டு இருந்தாலும் பரவால்ல… எல்லா விவரத்தையும் நாளைக்கு சொல்லிட்றேன்… நாளைக்காவது என்னோட பேசுவியா?” அவன் குழப்பத்தில் இருப்பது அவனுக்கேத் தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தமில்லாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் மனதை மாற்ற, கதவைத் திறந்து பாலக்னி பக்கம் போனான்.அப்போது மணமகள் அறையில் இருந்து ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழ ஆரம்பித்தது.

இளா! உனக்கு அருள் மேல இவ்வளவு நம்பிக்கையாடி? ஒரு வேளை உன்னோட லெட்டரப் பார்த்துட்டு சரி எங்கிருந்தாலும் வாழ்கனு போயிருந்தார்னா என்னப் பண்ணியிருப்ப”

“அதெப்படிப் போக முடியும்? லவ்வர்ஸ்க்கு காதல விட அதிகமா இருக்க வேண்டியது நம்பிக்கை! எங்கிட்ட அருள் காதல சொன்னப்ப நான் மறுத்தாலும் ஆறு மாசமா எங்கிட்டப் பேசாமலே எந்த நம்பிக்கைல அவன் காத்திட்டிருந்தான்? அதே நம்பிக்கைல தான் நானும் அப்படி ஒரு லெட்டர் எழுதினேன்! நானாவது ஆறு மாசம் கழிச்சுதான் என்னோட லவ்வ சொன்னேன், அருள் பார்த்தியா லெட்டரப் பார்த்த அடுத்த வாரமே எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டான். என்ன விட அவனுக்கு தான்டி எம்மேல காதல் அதிகம்! அதுவும் நாங்க லவ் பண்ண மாதிரி எங்கப்பாகிட்ட அவன் காட்டிக்கவே இல்ல! அதனாலேயே எங்கப்பாவுக்கு அவனப் பிடிச்சுப் போயிருக்கும்!”

“அடிப்பாவி அருள டெஸ்ட் பண்றதுக்குதான் இப்படி சீரியஸா ஒரு லெட்டர் எழுதினியா?”

“சீச்சீ…எனக்கு அருளப் பத்திதான் முழுசாத் தெரியுமே அப்புறமென்னப் புதுசா டெஸ்ட் பண்ணப்போறேன்? இன்னமும் அவனுக்கு அந்த inferiority complex மட்டும் போகல. நான் பல தடவை எங்கப்பாகிட்ட வந்து பேசுன்னு சொல்லியும் என்னதான் பேச சொன்னானேத் தவிர அவன் வந்து பேசறேன்னு சொல்லல. எங்க வீட்ல வேற, ஜாதகத்தப் பாத்துட்டு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்னு சீரியசா அலையன்ஸ் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன். அதுவும் சரியா வொர்க் அவுட் ஆயிடுச்சு! பின்ன என்னடி வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்கவே தைரியமில்லாதவன எந்தப் பொண்ணோட அப்பாவுக்கு தான் பிடிக்கும்?”

“அது சரி நீ அப்படி ஒரு லெட்டர் எழுதிட்டேன்னு சொன்னவுடனே நானே உண்மையாதான் இருக்குமோன்னு நெனச்சிட்டேன். நீயும் காலேஜ்லேயே அருள்கிட்டப் பட்டும் படாமதானப் பழகின!”

“ம்ம்… வெளியில அப்படித் தெரிஞ்சிருக்கலாம்… ஏன்னுத் தெரியல அருளுக்குப் பணக்காரங்களப் பார்த்தாலேக் கொஞ்சம் அலர்ஜி. அதான் நானும் சினிமா, ரெஸ்டாரண்ட்னு அவன வெளியில கூட்டிட்டு சுத்தியிருந்தேன்னு வச்சிக்கோ, என்னையும் பிடிக்காமப் போயிடுச்சுன்னா என்னப் பண்றதுன்னு பயந்துட்டேன். எனக்கும் அதுல இஷ்டம் இல்லாததும் ஒரு காரணம்”

“அதெல்லாம் சரி, ஆனா ஒரு நாள் அருள்ட்ட ஃபோன்ல பேசலன்னாக் கூட மூடவுட் ஆன மாதிரி இருப்ப, எப்டி அவ்ளோ நாளாப் பேசாம இருந்த???”

“தினமும் மனசுக்குள்ளேயே சாரி கேட்டுக்கிறதத் தவிர வேற என்னப் பண்ண முடியும்? தனக்குப் பிடிச்சது தன்ன விட்டு விலகிப் போறப்பதான எவ்வளவுக் கஷ்டப்பட்டாவது அத அடையனும்னு தோணும்? அதனாலதான் பேசாம இருந்தேன்”

“அதுக்காக… எல்லாம் நல்ல படியா முடிஞ்சபின்னாடியுமா அலையவிடனும்?”

“அவன் வந்து எங்கப்பாகிட்டப் பேசிட்டுப் போனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவன்ட்டப் பேசனும்னுதான் துடிக்கிறேன்… ஆனா இவ்வளவு நாள் பேசாம இருந்து அருளக் கஷ்டப்படுத்திட்டு இப்போ பேசனும்னு நெனச்சா வார்த்தை வர்றதுக்கு முன்னாடி எனக்கு அழுகதான் வருது, அதனாலேயே அவனப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டு இருந்தேன்! ரொம்ப கஷ்டமா இருக்குடி” விட்டால் அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏ..ஏ…இன்னைக்கு அழாதம்மா…நாளைக்குப் போய் உன் ஹப்பிய கட்டிப்புடிச்சு அழுதுக்கோ…இப்ப தூங்கு நானும் தூங்கப் போறேன்”

“ஆமாக் கண்டிப்பா நாளைக்கு first nightல அவனக் கட்டிப்பிடிச்சு அழத்தான் போறேன்” கண்ணீரோடு் சிரித்தாள்.

தன் மேல் உள்ளக் கோபத்தில்தான் பேசாமள் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, தான் கோபப்படுவேனோ என்றுதான் அவள் பேச முடியாமல் இருக்கிறாள் எனத்தெரிந்ததும் கவலை குறைந்தது.

“நீ சரியான லூசுடி” என்று நினைத்துக்கொண்டே கனவோடுத் தூங்கினான்.

அடுத்த நாள், திருமணம் முடிந்தது. முதலிரவு அறை. அருளைப் பார்த்ததும் பொங்கி வந்த அழுகையோடு அவனை நெருங்குகையில், அவனும் கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல், அழுதுகொண்டே அவனைக் கட்டிப்பிடித்தாள் இளவரசி. அழுகையோடு ஆரம்பமானது ஒரு முதலிரவு.

( முற்றும் )

பொங்கலோப் பொங்கல்!

பொங்கலோப் பொங்கல்!

பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்.


உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்

பொன்பொங்கலானது.


வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?

வாசனையோடு இருக்கிறது!


மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.

கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!


ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.

எனக்குள் நடக்கிறது

மயில் விரட்டு!

சுகமானப் பயணம்!

சுகமானப் பயணம்!

ஜன்னலுக்கு வெளியே பசுமையான வயல்வெளி
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்


கவலை மறந்த கல்லூரிக் காலம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்


அழகாய் வளைந்து செல்லும் மலைப்பாதை
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்


தூரத்து ஊரின் கோவில் திருவிழா
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்


என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!

ஒரு காதல் பயணம் - 3

ஒரு காதல் பயணம் - 3

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு



நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!

அதற்கு மறுநாள், வரிசையாக பூக்கடைகள் இருக்கும் அந்தக் கோயில் தெருவுக்குள் நீயும் உன் தங்கையும் வருகிறீர்கள்.
பூ வாங்க யாரும் வந்தால் வழக்கமாக கூவிக் கூவி அழைக்கும் கடைக்காரர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விட்டு ,
கோவிலில் இருந்த ஒரு சிலைதான் வெளியே உலா வருகிறது என வாயடைத்து இருக்கிறார்கள், என்னைப் போல.

கடையில் இருக்கும் பூக்களோ, “என்னை எடுத்துக்கோ”, “என்னை எடுத்துக்கோ” என உன்னிடம் கூப்பாடு போடுகின்றன.
மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.

நீ வரும் வரை தெரு முனையில் காத்திருக்கிறோம், நானும், நம் காதலும்.
எங்களைப் பார்த்ததும் “இங்கேயும் வந்தாச்சா?” என பதட்டப்படுகிறாய்.
“எல்லாப் பக்கமும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுள் மட்டுமல்ல , நானும்தான்” என சொல்கிறது காதல்.
“உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என காதலை முறைத்து விட்டு நீ என் பக்கம் திரும்புகிறாய்.

“இன்னைக்கு என்னவெல்லாம் புலம்பப் போறீங்க?” எனக் கிண்டலாகக் கேட்கிறாய்.
“புலம்பல் எல்லாம் எதுவும் இல்லை, ஒரு புகார் மனு தான் வாசிக்கனும்” என்கிறேன் நான்.
“புகாரா? நான் என்ன தப்பு பண்ணேன்?” என மெய்யாகவேப் பயப்படுகிறாய்.

“உன் மேல் புகார் சொன்னால், காதல் என்னைக் கைவிட்டுடாதா! புகார் எல்லாம் என் இதயத்தின் மீது தான்! என் இதயத்தில் குடியேறி விட்டதாக நேற்று நீ சொன்னாலும் சொன்னாய். அதிலிருந்து என் இதயத்திற்கு தலை கால் புரிய வில்லை. ஒரே மமதையுடன்தான் சுற்றுகிறது” எனப் புலம்ப ஆரம்பிக்கிறேன், நான்.

“அது செய்யும் அட்டூழியங்களை நீயேக் கேள் :
நேற்று இரவு நான் தூங்கப் போன போது இது என்ன சொல்லியது தெரியுமா?
உன் தேவதை இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கனவு வரும் நேரம் இது.
அவள் கனவில் நீ தானே இருக்க வேண்டும்! அதனால் ஓடு, ஓடு, என என்னை உன் கனவுக்குத் துரத்தியது.
உன் கனவுக்குள் நுழையும் ஆசையில் நானும் அதைச் செய்தேன்.
பிறகு ஒரு வழியாக நான் தூங்கிய போது கூட என் கனவுக்கு வந்த எல்லாரையும் காக்க வைத்து விட்டு,
உன்னை மட்டுமே உள்ளே அனுமதித்தது!
இப்படி நேற்று இரவு மட்டும் அது எத்தனை அட்டூழியங்களை செய்தது தெரியுமா?” என நான் சோக கீதம் வாசிக்கிறேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு இன்றைக்குப் புலம்பல் நீளும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு
“வாங்க, இங்க உட்கார்ந்து பேசுவோம்” என கோயிலின் வெளி சுற்றுத் திண்ணையில் அமர்கிறாய்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “ ம்…அப்புறம்?” என அதன் அடுத்த அட்டூழியத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறாய்.

“குளிக்கப் போனால், தேவதை குளிக்கிறாள்! நீ இரு!” என என்னைத் தடுக்கிறது.
“சாப்பிடும்போது கூட , தேவதைக்குப் போதுமாம்! நீ எழு!” என என்னைப் பாதியிலேயே எழுப்புகிறது.
இப்படிக் கொஞ்ச நாள் முன்பு வரை என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் இதயம்,
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உன் புராணம்தான் பாடுகிறது.
நான் என்ன சொன்னாலும், தேவதை சொல்வதைத்தான் நான் கேட்பேன் என அடம்பிடிக்கிறது.
அதனால்தான் என் இதயத்தை உன்னிடம் இழுத்து வந்து விட்டேன்.
அதனிடம் நீயேக் கேள்” என முழுதாய்க் கொட்டித் தீர்த்தேன்.

இதழோரம் ஒரு குறுநகையுடன் என் இதயத்தில் உன் காது வைக்க வருகிறாய்.
“ஏய்…ஏய்…என்ன செய்ற?”
“நீங்க தான “கேட்க” சொன்னீங்க…அதான் கேட்கிறேன்”
“நான் அதுகிட்ட, என்னன்னு கேள்வி கேட்க சொன்னா…நீ அது சொல்றத காது கொடுத்துக் கேட்கப் போறியே?
கடைசியில நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டீங்கப் பாத்தீங்களா” என நான் அப்பாவியானேன்.

“இல்லங்க…மொதல்ல அது என்ன சொல்லுதுன்னுக் கேட்டுக்கலாம், அப்புறமா அத நாலு வார்த்த நறுக்குன்னு நானேக் கேட்கிறேன்”
மறுபடியும் இதயத்தில் காது வைக்கிறாய்.

என் இதயமோ, “ பொய் சொல்றான், பொய் சொல்றான், நம்பாத…எல்லாத்தையும் அவனே செஞ்சுட்டுப் பழிய எம்மேலப் போடப் பார்க்கிறான்” என உனக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாக கிசுகிசுக்கிறது.

இதயத்தில் இருந்து காதை எடுத்த நீ, ஓரக் கண்ணில் என்னைப் பார்த்து விட்டு,
என் இதயத்தை நோக்கி, “ இதோ பார் இதயமே, நான் உன்னில் வசிக்க வந்ததற்குக் காரணமே அவர்தான்.
அவர் சொல்வதை நீ கேட்காவிட்டால் அப்புறம், உன்னை விட்டே நான் விலகி விடுவேன்”
என்று அதைக்கொஞ்சம் மிரட்டிவிட்டு, பாசாங்கு தான் என, அதைப் பார்த்துக் கண்ணடிக்கிறாய்.

“என் இதயம் முதலில் உன்னிடம் ஏதோ சொல்லியதே, என்ன சொன்னது?” என ஆர்வமாகிறேன் நான்.
“அது உங்கள் மேல் ஒரு புகார் சொல்லியது” என்கிறாய்.
“என் மேலா? என்னப் புகார் சொல்லியது?”
“ஆமாம், நான் மட்டும் தான், முதல் நாளே உங்கள் இதயத்தில் குடியேறினேன்.
ஆனால் நீங்கள் இன்னும் என் இதயத்துக்குள் நுழையவில்லை இல்லையா,
அதைத்தான் குத்திக் காட்டுகிறது” என உனது புகாரை என் இதயம் சொன்னதாக சொல்கிறாய்.
உன் நடிப்பைப் பார்த்து என் இதயம் கூட ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

“அதுதானா? நீயே மென்மையானவள். உன் இதயமோ உன்னையும் விட மென்மையானது.
அதில் வசித்துக் கொண்டு நான் என்னுடைய முரட்டுக் காதல் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்ய முடியாது
– அதை உன் இதயமும் தாங்காது.
அதனால்தான் என் காதலை முழுவதுமாக உன் இதயத்துக்குப் பழக்கப் படுத்திவிட்டு,
‘காதல்’ குறித்துக் கொடுக்கும் ஒரு நல்ல நாளில் என் இதயப்பிரவேசம் நிகழும்” என சொல்கிறேன் நான்.

நான் பேசி முடித்தப் பின்னும் கண்ணிமைக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த உன் தங்கை,
உன்னிடம் மெதுவாக சொல்கிறாள் : “அக்கா! இந்த லூசு மாமா உனக்கு வேணாங்க்கா!”
உன் தங்கையிடம் சத்தமாக நீ சொல்கிறாய் :
“ உன்னோட லூசு அக்காவுக்கு இந்த மாமாவ விட்டா, வேற எந்த நல்ல லூசுடி கிடைப்பாங்க?”

“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.

( காதல் பயணம் தொடரும் )

கவிதைகள் ஏமாற்றுவதில்லை

கவிதைகள் ஏமாற்றுவதில்லை

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?

உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?

அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?

இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?

அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!

ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!

ஒரு காதல் பயணம் - 4

ஒரு காதல் பயணம் - 4

காதல் பயணம் பகுதி ஒன்று இரண்டு மூன்று

உனக்குக் கல் நெஞ்சு என்று
எனக்குத் தெரியுமடி!
அதனால்தான் அதில்
காதல் சிற்பம் வடிக்க
கவிதை உளி கொண்டு
செதுக்குகிறேன் தினமும்!


ஒரு மாலைப்பொழுதில் நீ வரச் சொன்ன அந்த மரத்தடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்.
காத்திருக்கும் நேரத்தின் அவஸ்தை எல்லாம் பரவசமாக மாறும் அந்த கணத்தில் நீ வருகிறாய்.

நாம் அமர்வதற்காக தனது வேர்களை இருக்கைகளாக்கி இருக்கிறது, அந்த மரம்.
எதிர் எதிரில் அமர்கிறோம் நாம்.
இரு கைகளாலும் அணைக்கிறது மரம்.

எப்போதுமில்லாத என் மௌனத்தில் கலவரமடைந்து, “ம்..சொல்லுங்க” என மௌனக் குளத்தில் வார்த்தைக் கல் வீசுகிறாய்.
“இன்றைக்கு சொல்லப் போவதெல்லாம் நீ தான்; கேட்டுக்கொண்டிருக்கப் போவது மட்டும்தான் நான்” என்கிறேன்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” புரியாமல் கேட்கிறாய் நீ.
“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என நீ வரிசையாய் சொல்ல வேண்டும்; எல்லாவற்றுக்கும் நான் ‘உம்’ கொட்ட வேண்டும்
– இது தான் இன்றைக்கு காதல் நமக்குக் கொடுத்திருக்கிற வீட்டுப்பாடம்” என்கிறேன்.

“எனக்காக நீங்க என்ன வேணா செய்வீங்க இல்ல?”
“முதலில் அந்த “நீங்க”-வில் இருந்து “ங்க”-வை எடுத்துட்டுக் கேள், சொல்றேன்!”
“சரி…சரி…எனக்காக நீ என்ன வேணா செய்வதான?”
“இன்னைக்கு உன்னோட வீட்டுப் பாடத்தத் தவிர மத்தது எல்லாம் செய்வேன்!”
இதை நீயும் எதிர் பார்த்திருப்பாய்; சிரித்து விட்டு ஆரம்பிக்கிறாய்.

“அம்மா மடியில் படுத்துக் கிடக்க…
அப்பா சட்டையைப் போட்டுப் பார்க்க…
தங்கையோடு சண்டை பிடிக்க…”

“ம்”

“அப்புறம்…
ஜன்னலுக்கு வெளியே மழை…கையில் சூடாகத் தேநீர்…
மழை முடிந்த மண்வாசம்…அந்த ஈரக் காற்று…
வானவில்…
இளஞ்சூடான மாலை வெயில்…
அந்தி வானம்…
பௌர்ணமி நிலா…
கூட்டமாய் நட்சத்திரம்…
புதிதாய்ப் பூத்தப் பூ…
இப்படி இயற்கை தரும் எல்லாம்…

அப்புறம்…
தோழிகளோடு மொட்டை மாடி அரட்டை…
சன்னலோர ரயில் பயணம் – கையில் கவிதைப் புத்தகம்…
அதிகாலை உறக்கம்…மெல்லிய சத்தத்தில் சுப்ரபாதம்…
வீட்டில் எப்போதும் இழையும் இளையராஜா…
குழந்தைகளின் கொஞ்சல்…
மலைப் பாதையில் நடை…
மார்கழி மாதக் கோலம்…
எங்க ஊர்த் திருவிழா…
வாய்க்கால் நீச்சல்…
அருவிக் குளியல்…
மரத்தடி ஊஞ்சல்…

இப்படிப் போய்க்கிட்டே இருக்கும்….”

வாய்ப்பாடு ஒப்பிக்கும் பள்ளிக்கூட சிறுமி போல,
மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறாய்.

“ஆமாம் உனக்கு என்னப் பிடிக்கும்?”, என்னைப் பார்த்துக் கேட்கிறாய்.
“அதான் நீயே சொல்லிட்டியே!”, மெதுவாக சொல்கிறேன் நான்.

“ஓ! எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்குமா?”
“நான் அத சொல்லல…நீ என்னக் கேட்டனு திரும்பவும் கேளு!”

“உனக்கு என்னப் பிடிக்கும்னு கேட்டேன்”
“நானும் அதையேதான் சொல்றேன் – எனக்கு உன்னப் பிடிக்கும்னு”

“இப்படியேப் பேசுனா சீக்கிரமே உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்!”
“அது இன்னும் எனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறியா?”

“ஐய்யோக் கடவுளே! நான் சீரியஸா கேட்கிறேன், சொல்லு உனக்கு என்னப் பிடிக்கும்?”

“எனக்கு ஒன்னே ஒன்னு தான் பிடிக்கும். என்னோடக் காதலிக்கு பிடிச்சதையெல்லாம்
அவள் வாயாலேயே சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும்!”

வெட்கத்தைக் கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு என்னை அப்படியேக் கட்டிக் கொள்கிறாய்,
ஒரு குழந்தையைப் போல.

கரைந்து போகிறேன் நான்.
அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் பூக்கள் நம்மீது விழுந்ததே - அது இயல்பாய் நடந்தது தானா?

(காதல் பயணம் தொடரும்...)

கண்களால் காதல் செய்!

கண்களால் காதல் செய்!

நான் :

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.


இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!


பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!


தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..


உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…


திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?


என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!

அவள் :

போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!

கவிதை "ஆறு"

கவிதை "ஆறு"

என்னையும் இந்த ஆறு விளையாட்டுக்கு அழைத்த நவீன் பிரகாஷ் க்கு நன்றி! நான் இரசித்த, இரசிக்கும் கதை, கவிதை, இசை, திரைப்படம், மறக்க முடியாத நிகழ்வுகள், மனிதர்கள் என்று எவ்வளவோ எழுதத் தோன்றினாலும் இப்போதைக்கு இந்த ஆறு கவிதைகளை (வாக்கியங்களை மடக்கிப் போட்டு, வியப்புக் குறியெல்லாம் போட்டிருக்கிறேன் – நம்புங்க , கவிதைதான்! ) மட்டும் எழுதி விட்டுப் போகிறேன். பின்னொரு நாளில் தனித் தனிப் பதிவுகளாய் அவற்றைப் பதித்து விட எண்ணம்.

என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!

முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!

"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?

அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!

நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!

நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!

"ஆறு" பதிய யாரையும் நான் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இங்கு பின்னூட்டமிடுபவர்கள் யாரேனும் இன்னும் "ஆறு" பதிய வில்லையென்றால் தொடரலாம்.